2008-11-24 16:00:41

கிறிஸ்தவ மறைசாட்சிகள் அன்புக்குச் சாட்சிகள் - கர்தினால் சரைவா மார்ட்டின்ஸ்


நவ.24,2008. கிறிஸ்தவ மறைசாட்சிகள், இறையன்பு, பிறரன்பு மற்றும் தங்களைத் துன்புறுத்தியோர் மீதான அன்புக்குச் சாட்சிகளாய் இருக்கின்றார்கள் என்ற திருத்தந்தையின் வார்த்தைகளைக் குறிப்பிட்டார் புனிதர் நிலைக்கு உயர்த்துவதற்கான திருப்பீட பேராயத் தலைவர் கர்தினால் ஹோசே சரைவா மார்ட்டின்ஸ்.

ஜப்பானின் நாகசாகியில் 188 மறைசாட்சிகளை முத்திப்பேறு பெற்றவர்கள் என்ற நிலைக்கு உயர்த்திய திருப்பலியை இன்று நிகழ்த்திய கர்தினால், இன்றைய உலகுக்கு இம்மறைசாட்சிகளின் எடுத்துக்காட்டான வாழ்வு மிகவும் தேவைப்படுகின்றது என்றார்.

நான்கு இயேசுசபை குருக்கள், ஓர் அகுஸ்தீன் சைப குரு இன்னும் சிறார், முழுக் குடும்பங்கள் என 183 பொதுநிலை விசுவாசிகள், 1603க்கும் 1639க்கும் இடைப்பட்ட காலத்தில் விசுவாசத்திற்காகக் கொல்லப்பட்டனர்.

கிறிஸ்தவர்க்கெதிரான இவ்வடக்குமுறைக்குத் தப்பி பின்னர் மறைந்து வாழ்ந்த கிறிஸ்தவர்கள் 19ம் நூற்றாண்டில் ஐரோப்பிய மறைபோதகர்களின் வருகைக்குப் பின்னர் வெளிப்படையாய் வாழத் தொடங்கினர்.

புனித பிரான்சிஸ் சவேரியார் 1549க்கும் 1552க்கும் இடைப்பட்ட காலத்தில் ஜப்பானில் நற்செய்தி பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.