2008-11-24 15:57:00

உலகம் இறையரசைப் புறக்கணித்தால் அழிவை எதிர்நோக்கும் – திருத்தந்தை எச்சரிக்கை


நவ.24,2008. ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை, உலகம் இறையரசைப் புறக்கணித்தால் அழிவை எதிர்நோக்குவதைவிட வேறு வழியில்லை என்று கூறினார்.

கிறிஸ்து அரசர் பெருவிழாவான இஞ்ஞாயிறன்று வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த ஏறத்தாழ முப்பதாயிரம் விசுவாசிகளுக்கு மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை, நல்லதைச் செய்யுங்கள், இறையரசு நம் மத்தியில் நிஜமாக்கப்படும் என்றார்.

நான் பசியாய் இருந்தேன், உண்ணக் கொடுத்தீர்கள், தாகமாய் இருந்தேன், குடிக்கக் கொடுத்தீர்கள், அந்நியராய் இருந்தேன், என்னை வரவேற்றீர்கள் என்ற இறுதி தீர்ப்பு பற்றிய மத்தேயு நற்செய்தியை மையமாக வைத்து விளக்கிய அவர், இந்நற்செய்திப் பகுதி, நம் கலாச்சாரத்தின் ஓர் அங்கமாக மாறியுள்ளது என்றார்.

இதில் பயன்படுத்தப்படடுள்ள மொழி பொதுவானதாக இருந்தாலும் இது கொடுக்கும் செய்தி நமது இறுதி முடிவு பற்றிய உண்மையையும் நாம் எதை வைத்துத் தீர்ப்பிடப்படுவோம் என்பது பற்றியும் சொல்லும் மிகவும் முக்கியமான பகுதி என்றும் கூறினார் திருத்தந்தை.

இறையரசு இவ்வுலகைச் சார்ந்தது அல்ல, மாறாக அனைத்து நன்மைகளின் நிறைவைக் கொண்டு வருகிறது என்றும் கூறிய திருத்தந்தை, நாம் நம் அயலாரை அன்பு செய்வதை நற்செய்தி கூறுவது போல நாம் செயலளவில் காட்டினால் இறையரசு நம் மத்தியில் நிஜமாக்கப்படும் என்றார்.

மாறாக ஒவ்வொருவரும் அவரவர் ஆதாயத்தின்படி நினைத்தால் இவ்வுலகம் அழியும்

என்ற அவர், புனித பவுல் சொல்வது போல இறையரசு நீதியிலும் அமைதியிலும் தூய ஆவியில் மகிழ்வதிலும் அடங்கியுள்ளது என்றும் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.