2008-11-23 19:51:58

புனித ஆண்ட்ரூ டுங் - லாக் ., தோழர்கள், மறைசாட்சிகள். விழா 24 ,நவம்பர்.


புனித ஆண்ட்ரூ டுங் - லாக் . இயேசு சபைக்குரு , மற்றும் தோழர்கள் மறைசாட்சியர் . மறைசாட்சியான காலம் கி.பி . 1820 - 1862 .

வியட்நாமில் கி.பி. 1820 முதல் 1862 வரை நடந்த வேத கலகத்தில் மறைசாட்சிகளாக இறந்த 17 பேரில் குருவானவராகிய புனித ஆண்ட்ரூ ஒருவர் . இவர்கள் கி.பி. 1900 முதல் 1951 வரை நான்கு வெவ்வேறு காலங்களில் முக்திப் பேறு பட்டம் பெற்றவர்கள் .இறுதியில் திருத்தந்தை 2 ஆம் ஜான்பால் இவர்களுக்குப் புனிதர் பட்டம் அளித்தார் . போர்த்துக்கீசியர் வழியாக இங்குக் கிறிஸ்தவம் தோன்றியது .கி.பி.1615 இல் இயேசு சபையினர் டா நாங் என்ற நகரை மறைபரப்புத் தளமாகத் தேர்வு செய்தனர். ஜப்பானிலிருந்து வெளியேற்றப்பட்ட கத்தோலிக்கர்களின் ஆன்மீகப் பொறுப்பை ஏற்றிருந்தனர் . கிறிஸ்தவர்கள் கி.பி. 19 ஆம் நூற்றாண்டிலும் அதற்கு முன்னரும் அச்சமூட்டும் போராட்டங்களைச் சந்தித்தனர் . 1820 ஆம் ஆணடுக்குப் பிறகு 60 ஆண்டுகளாக ஒரு இலட்சத்திலிருந்து 3 இலட்சம் பேர் வரை வதைக்கப்பட்டார்கள் . அல்லது கொல்லப்பட்டார்கள் . போராட்டத்தின் தொடக்க நாட்களில் மறைபரப்புக் குருக்களும் , ஸபெயின் நாட்டு தோமினிக்கன் சபைக் குருக்களும் , பிரான்சிஸ்கன் மூன்றாம் சபையினரும் கொல்லப்பட்டனர் .கி.பி. 1954 இல் ஒன்றரை இலட்சம் கத்தோலி்க்கர்கள் வியட்நாமில் வாழ்ந்தனர். மீண்டும் மீண்டும் கிறிஸ்தவர்களுக்குத் தொல்லை கொடுத்ததன் பொருட்டு ஆயிரக்கணக்கான கத்தோலிக்கர்கள் எல்லாவற்றையும் துறந்துவிட்டுத் தென் பகுதிக்குச் சென்றுவிட்டனர் . வடபகுதியில் எஞ்சியிருந்த கத்தோலிக்கர்களில் பலர் சிறையில் வாடினர் . இப்போதும் பொது உடைமை ஆட்சியில்தான் இந்த நாடுகள் பல துயரங்களுக்கு ஆளாகி வருகின்றனர் . எந்த ஒரு அச்சுறுத்தும் ஆற்றலும் திருச்சபையை நசுக்க இயலாது என்பதை வியட்நாம் கிறிஸ்தவர்கள் அன்றும் இன்றும் வாழ்ந்து காட்டுகின்றனர் . தார்க்கோலுக்கு எதிராக உதைக்கமுடியாது என்றுதானே இயேசு திருத்தூதர் பவுலுக்கு எச்சரிக்கை மணி அடித்தார் . இயேசுவின் அரசு அழிக்கப்பட முடியாதது என்பதை கிறிஸ்துவே உலகுக்கு உணர்த்துவார் .








All the contents on this site are copyrighted ©.