2008-11-19 18:17:29

எங்கோ நிம்மதி ? 19 நவம்பர் , 08 .


பட்டறைக்கல்லா , சம்மட்டியா ?

உளவியல் உலகில் பல மாற்றங்கள் வந்துள்ளன . நாம் சிந்திப்பதால் நம்மையும் , உலகையும் ஆளமுடியும் என்பது நிஜம் என உறுதிசெய்யப்பட்டுள்ளது . ஒரு குறிக்கோளை அடைய விரும்பும் ஒருவர் ,அவற்றைப் பெருவதற்கு வழியாகிய செயலில் உறுதியுள்ளவராக இருக்கவேண்டும் . வாழ்க்கையில் பலருடைய துன்பங்களுக்குக் காரணம், மனத்தில் உறுதி இல்லாமையே . வாழ்க்கையில் துன்புறுவோர் பலர் தாங்களே திட்டமிடாது , பிறரைப்பார்த்தோ , பிறர் கூறுவதைக்கேட்டோ ,சரிவரச்சிந்திக்காது, மெய்ப்பொருள் காணாது தங்கள் வாழ்வை அமைத்துக்கொள்வார்கள் . நல்லனவற்றையும் தீயனவற்றையும் ஆராய்ந்து நாம் தொழில் செய்ய ஒரு முடிவுக்கு வரவேண்டும் . இரு வெவ்வேறு திக்கில் செல்லும் சாலையில் நின்று கொண்டு, எந்தப்பக்கம் போகப் பேருந்து வருகிறதோ அதில் தொத்திக்கொண்டு போவதுபோல வாழ்க்கையில் திட்டமின்றி செயல்பட்டால் வாழ்க்கை என்னாவது . ஆற்றில் வெள்ளம் வரும்போது சிறு மீன்கள் தண்ணீர் செல்லும் பாதையில் அடித்துச் செல்லப்படுவது போல , வாழ்க்கையில் பலர் போய்க் கொண்டிருப்பதைக் காண்கிறோம் . கடவுள் நம்மை சம்மட்டிகளாக இருப்பதற்கே படைத்துள்ளார். அடிவாங்கும் பட்டறைக்கல்லாக இருப்பதற்கு அல்ல . நாம் ஆக்கப்பூர்வமாகச் செயல்புரியவே அவர் நம்மைப் படைத்துள்ளார். அவரது சாயலிலேயே படைத்துள்ளார் . உழைக்கும் கைகள் , உலகை உருவாக்கும் கைகளாகும் .



வரலாற்றில் பலர் தவறான போக்கில் சென்று வாழ்வை இழந்துள்ளதைக் காண்கிறோம் . பல வாய்ப்புக்கள் நமக்கு முன் வைக்கப்படுகின்றன . நன்மையான , உண்மையான , பிறரன்பைக் காட்டக்கூடிய வாய்ப்புத் தரப்படுகிறது . வேறு சில வாய்ப்புக்கள் நம்மைக் குழப்பத்தில் தள்ளக்கூடியனவாக இருக்கலாம் .



நல்ல குறிக்கோளைத் தேர்ந்து கொள்வது மட்டும் போதாது . அதை , பக்குவமாக என்ன விலை கொடுத்தும் நாம் வாழ்வில் நிறைவேற்றவேண்டும் . கொள்கைகளின்படி நாம் வாழவில்லை என்றால் அவற்றால என்ன பயன் . கடந்தது முடிந்துபோன ஒன்று . வருங்காலம் கடவுள் கைகளில் . நம் கைகளில் இருப்பது நிகழ்காலம் மட்டுமே . நிகழ்காலம் பயனில்லாது அல்ல . அது நன்னீர் சுரக்கும் மணற் கேணி . தொட்டனைத்தும் ஊறும் . இந்த நேரமே மிக முக்கியமானது என்கிறார் எமர்சன் என்னும் சிந்தனையாளர் . அதை நழுவ விட்டால் இருள் வாழ்வில் மண்டிவிடும் .





நாள் என ஒன்றுபோல் காட்டி உயிர் ஈரும் வாள் இந்த நாள் என்பது . எனவே நன்மையானதை நலமாக இப்பொழுதே தேர்வு செய்தல் வேண்டும் .



ஈரமான மண் குயவனுடைய பட்டறையில் இருக்கும்போது ஒவ்வொரு சிறிய அழுத்தமும் அதில் மாற்றங்களை உண்டு பண்ணும் . அது காய்ந்தபிறகும் , நெருப்பில் இட்டு சுடப்பட்ட பிறகும் அதில் மாற்றங்களைக் கொண்டுவருதல் இயலாதது .



ஆங்கிலக் கவிஞன் லார்டு பைரன் , தம் வாழ்நாட்களில் 10 நாட்கள்கூட மகிழ்ச்சியாக இருந்ததில்லை எனக் கூறியுள்ளான் . ஆங்கில மன்னன் எட்டாவது என்றி எட்டுப்பேரை மணந்திருந்தான் . அவன் செய்த குளறுபடிகளுக்கு வரலாறு அவனைத் தூற்றுகிறது . அவனுக்கு வலது கரமாக இருந்த கர்தினால் ஊல்சி என்பவர், மனம் மாறியவராக , என்றியை விட்டு விலகினார். கடவுளை மறந்து , ஒரு கயவனோடு காலத்தைக் கழித்ததற்காக கதறி அழுது இறந்தார் .



சுதந்திரம் என்பது பயங்கரமான ஆயுதம் . குழந்தை கையில் கொடுக்கப்படும் கூரிய வாள் போன்றது . எனவே நாம் அதனைப் பொறுப்புணர்வோடு சரியாகப் பயன்படுத்தவேண்டும். தவறான போக்குக்கு இடம் கொடுக்கக் கூடாது .



தீயவை தீய பயத்தலால், அவை தீயினும் அஞ்சப்படவேண்டும் . கடவுளுக்கு முன்உரிமை இல்லாத வாழ்வு, நுனி மரத்திலேறி அடி மரத்தை வெட்டுவது போன்றதாகும் . அவர்தானே நம் வாழ்வுக்கு ஆதாரம் . ஆதாரமும் , அடித்தளமுமின்றி வாழ்வேது ?



நெருப்புக்குள் தூங்க முயலுமா ? .



உலகமெல்லாம் நமதேயானாலும் நம் வாழ்வை இழந்தோமெனில் அதனால் வரும் பயன் என்ன ? . ஒரே சமயத்தில் கடவுளுக்கும் சாத்தானுக்கும் வழிபாடு செய்ய முடியாது . நம் உள்ளமெனும் கோவிலில் ஆண்டவனுக்கு இல்லாத இடமா ? எல்லாம் இறைவனின் மகிமைக்கே , எதுவும் அயலார் நன்மைக்கே என நாம் வாழ்தல் வேண்டும் . எல்லோரும் இன்புற்றிருக்க நாம் வழி காணுதல் வேண்டும் . நாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெற வேண்டும். இறைச்சாயலில் படைக்கப்பட்ட மனிதர்களுக்குச் செய்வதெல்லாம் நம்மை காத்துவரும் ஆண்டவனுக்கே செய்வதில்லையா ? . நாம் புரியும் நன்மையெல்லாம் ஆண்டவன் இடும் முத்திரையோடு நூறு மடங்காகப் பலன் தரக்கூடியவை ! செய்யும் தொழிலே தெய்வமென்றால் , நம் கடன் பணிசெய்து கிடப்பதே .



ஒரு சகோதரர் தையல் தொழில் செய்து வந்தார் . அந்திய காலம் வந்தது . சாகும் தருவாயில் அவர் அருகிலிருந்தோரை அழைத்து வான் வீட்டுச் சாவியைக் கொண்டு வருமாறு கூறினார் . மற்றவர்கள் இவர் எதைக் கேட்கிறார் என்று புரிந்து கொண்டார்கள் . அவர் துணி தைக்கப் பயன்படுத்திய ஊசியைக் கொண்டு வந்தனர் . அவர் முகத்தில் மகிழ்ச்சி ததும்பியது . இந்த ஊசியை வைத்துத்தான் நான் நாளும் ஆண்டவனுக்காக என் பணியைத் தொடர்ந்தேன் என்றார் . இவ்வுலகை விட்டுப்போகும் இவ்வேளையில் எனக்கு இதுவே வான்வீட்டின் திறவு கோல் என்றார் .

ஆம் , இறைவனின் விருப்பத்தை , நாம் உற்சாகத்தோடு செயல்படுத்தி , நம் வாழ்வுக்கு நாம் பொறுப்பேற்று , பிறர்க்கென வாழும் தகைமையுடையோராக வாழ்ந்தால் நிம்மதி நம் முகவரி தேடி ஓடி வராதா ?








All the contents on this site are copyrighted ©.