2008-11-15 14:12:45

மனிதன் காரணமான சுற்றுச்சூழல் கேடு ஆசியாவில் நலவாழ்வுக்கு அச்சுறுத்தல்


நவம்.14,2008. அரேபிய தீபகற்பத்திலுருந்து சீனா, அங்கிருந்து மேற்கு பசிபிக் பெருங்கடல் வரை உருவாகியுள்ள மனிதன் காரணமான சுற்றுச்சூழல் மாசுக்கேடான மூன்று கிலோ மீட்டர் தடிமான மரக்கலர் மேகம், ஹிமாலய பனிப்பகுதியை உருக்கியும் ஆசிய நகரங்களை இருட்டாக்கியும், மனித நலத்திற்குக் கேடாகவும் இருந்து வருகின்றது என்று யுஎன்இபி என்ற ஐ.நா.சுற்றுச்சூழல் திட்ட அமைப்பின் புதிய அறிக்கை கூறுகிறது.

அதேசமயம் இந்தத் தடிமான மரக்கலர் மேகம் வேளாண்மையைப் பாதிப்பதால் ஆசியாவிலுள்ள 300 கோடி மக்களின் உணவுக்கும் நலத்திற்கும் அச்சுறுத்தலாக இருக்கின்றது என்றும் அவ்வாய்வறிக்கை மேலும் கூறுகிறது.

புதைபொருள் எரிப்பு, உயிர்கள் எரிப்பு ஆகியவைகளால் உருவாகும் கறுப்பு கார்பன், புகைக்கரி போன்றவை சூரிய ஒளியையும் காற்றிலுள்ள வெப்பத்தையும் உறிஞ்சுகின்றன என்று பெய்ஜிங்கில் வல்லுனர்கள் வெளியிட்ட ஆய்வறிக்கை கூறுகிறது.

மும்பை, புதுடெல்லி, டாக்கா, கராச்சி, சியோல், பாங்காக், கெய்ரோ குவாங்சு என பல நகரங்கள் இம்மேகத்தின் பாதிப்பைக் கொண்டுள்ளன, 1970 களிலுருந்து சீனாவின் குவாங்சு நகரத்தில் சூரிய ஒளி மங்கலாகத் தெரிவதாகவும் கூறப்படுகிறது.








All the contents on this site are copyrighted ©.