2008-11-15 14:08:12

உலக நீரழிவு நோய் தினத்தில் முதன்முறையாக வத்திக்கான் பங்கேற்பு


நவ.15,2008. உலக நீரழிவு நோய் தினத்தைக் குறிக்கும் வகையில் நேற்று இரவு வத்திக்கான் பசிலிக்கா சதுக்கத்திலுள்ள புனிதர்கள் பேதுரு பவுல் திருவுருவச் சிலைகள் நீலநிற விளக்குகளால் ஒளிர்ந்தன.

இவ்வாறு இத்திருவுருவச் சிலைகளுக்கு ஒளியேற்றியதன் மூலம் வத்திக்கான் முதன்முறையாக இந்த உலக நீரழிவு நோய் தினத்தில் பங்கெடுத்தது என்று திருப்பீடச் சார்பு தினத்தாள் லொசர்வாத்தோரே ரொமானோ கூறியது.

1991 ஆம் ஆண்டு கடைபிடிக்கத் தொடங்கப்பட்ட உலக நீரழிவு நோய் தினம் தற்சமயம் 160க்கும் மேற்பட்ட நாடுகளில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அன்றைய தினத்தில் நீரழிவு நோயை வெளிச்சத்திற்குக் கொண்டு வரும் நோக்கத்தில். ஐ.நா. தலைமையகம், பிரமிடுகள், நயாகரா நீர்வீழ்ச்சி, இலண்டன் டவர், ரியோ தெ ஜனியரோ கிறிஸ்து மீட்பர் திருவுருவம், குவைத் கோபுரங்கள் என உலகின் ஏறத்தாழ 990 முக்கிய நினைவுச் சின்னங்களில் மாலை 6.30க்கு ஒளியேற்றப்பட்டது.

இன்று உலகில் 18 கோடிக்கும் மேற்பட்டோர் நீரழிவு நோயால் துன்புறுகின்றனர். இதனைக் கட்டுப்படுத்துவதற்கு உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லையெனில் அடுத்த பத்தாண்டுகளில் இந்நோயாளிகளின் இறப்பு 50 விழுக்காட்டுக்கு அதிகமாக இருக்கும் என்று உலக நலவாழ்வு நிறுவனம் அறிவித்தது. 2030ல் தற்போதைய எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரிக்கக்கூடும் எனவும் அந்நிறுவனம் எச்சரித்துள்ளது.








All the contents on this site are copyrighted ©.