2008-11-10 11:34:41

வழிபாட்டுத்தலங்கள் பாதுகாக்கப்படுவதற்கு திருத்தந்தை அழைப்பு


நவம்.10,2008. விசுவாசிகள் செபிப்பதற்குக் கூடும் ஆலயங்கள் பாதுகாக்கப்படுவதற்குச் சமுதாயம் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டுமென்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் வலியுறுத்தினார்.

இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்பட்ட உரோமையிலுள்ள ஜான் லாத்தரன் பசிலிக்கா நேர்ந்தளிப்பு விழாவை மையமாக வைத்து மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை, உலகில் ஆவியிலும் உண்மையிலும் தம்மை வழிபடும் ஒரு சமூகத்தில், ஓர் ஆன்மீக ஆலயத்தைக் கட்டுவதற்கு விரும்பும் கடவுளின் ஆவலுக்கு எப்பொழுதும் உகந்ததாய் இருக்கும் பேருண்மையை இவ்விழா கொண்டாடுகின்றது என்றார்.

இப்புனித கட்டிடத்தைக் கௌரவிப்பது, உரோமன் திருச்சபையின் மீதான அன்பையும் வணக்கத்தையும் வெளிப்படுத்துவதாக இருக்கின்றது என்ற அவர், புனித அந்தியோக் இஞ்ஞாசி சொன்னது போல, இந்த உரோமன் திருச்சபை, அனைத்து கத்தோலிக்கச் சமூகத்தின் மீதான அன்பைக் குறித்து நிற்கின்றது என்றார்.

வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா வளாகத்தில் கூடியிருந்த ஏறத்தாழ முப்பதாயிரம் விசுவாசிகளுக்கு உரை வழங்கிய திருத்தந்தை, உலகப் பொருட்களால் கட்டப்பட்ட இவ்வாலயம், ஆன்மீகக் கட்டிடத்தின் வெளிப்பாடாக இருக்கின்றது, கிறிஸ்தவச் சமுதாயமே இவ்வான்மீகக் கட்டிடம் என்றும் கூறினார்.

ஆலயங்களின் அழகும் நேர்த்தியும் நல்லிணக்கமும் கடவுளைப் புகழும் நோக்கம் கொண்டவை, அத்துடன் இவை, பாவம் நிறைந்த, வரையறைக்கு உட்பட்ட மனிதர்களாகிய நம்மையும் புனிதர்களின் உண்மையான புனிதராகிய இயேசுவோடு நெருங்கிய உறவு கொண்டு ஒழுங்கான அமைப்பை உடைய அண்டத்தை உருவாக்க அழைக்கிறது என்று திருத்தந்தை மேலும் கூறினார்.

இக்காரணத்தினால், ஒவ்வொரு சமூகமும் தமது புனிதக் கட்டிடங்களுக்குச் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டிய கடமையைக் கொண்டுள்ளது, இக்கட்டிடங்கள் மதிப்பிடமுடியாத சமய மற்றும் வரலாற்று பாரம்பரியச் சொத்துக்கள் என்று மூவேளை செப உரையில் கூறினார் திருத்தந்தை.

உரோமைப் பேரரசன் தியோக்கிளேசியன் கிறிஸ்தவர்களை அடக்கி ஒடுக்கிய கொடுமைகள் முடிந்த சிறிது காலத்தில் அதாவது கிபி.313ஆம் ஆண்டில் பேரரசர்கள் கான்ஸ்ட்டடைனும் லிசினியுசும் எடிக்ட் ஆப் மிலான் என்ற கடிதத்தில் கையெழுத்திட்டனர். இக்கடிதம் உரோமைப் பேரரசில் சமய சகிப்புத்தன்மையை அறிவித்தது. இதற்குப் பின்னர் இந்த ஜான் லாத்தரன் பசிலிக்கா கட்டப்பட்டது. திருத்தந்தை சில்வெஸ்டர் 324ஆம் ஆண்டுவாக்கில் இவ்விழாவை ஒவ்வோர் ஆண்டும் உரோமையில் கொண்டாடச் செய்தார். பின்னர் 1565ம் ஆண்டிலிருந்து இவ்விழா அகிலத் திருச்சபையிலும் கொண்டாடப்படத் தொடங்கியது.








All the contents on this site are copyrighted ©.