2008-11-10 11:35:43

காங்கோவில் அமைதியை நிலைநாட்ட திருத்தந்தை


நவம்.10,2008. காங்கோ குடியரசில் சண்டையில் ஈடுபட்டுள்ள அனைவரும் அமைதியை நிலைநாட்டவும், சட்டத்தையும் மனித வாழ்வையும் மதிக்கவும் வேண்டுமென்று கேட்டுக் கொண்டார் திருத்தந்தை.

வளாகத்தில் கூடியிருந்த விசுவாசிகளுடன் ஞாயிறு மூவேளை செபத்தைச் செபித்த பின்னர் இவ்வாறு கூறிய அவர், காங்கோவின் கீவு வடக்கு மாகாணத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் சண்டை பற்றிய தமது கவலையையும் தெரிவித்தார்.

இரத்தம் சிந்தும் ஆயுதம் தாங்கிய முறைகேடான சண்டைகளும், திட்டமிட்ட கொடூரங்களும் பல அப்பாவிகளின் உயிர்களைக் காவு கொண்டு வருகின்றன, அங்கு இடம் பெறும் அழிவுகளும் சூறையாடல்களும் வன்முறைகளும், பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களிடம் இருந்த கொஞ்சம் உடமைகளையும் விட்டுவிட்டு வெளியேறக் காரணமாகியுள்ளன என்றும் கூறினார் அவர்.

துன்புறும் இம்மக்கள், இன்னும் இவர்களின் துயர் துடைப்பதற்கு உழைத்து வரும் அனைவரின், குறிப்பாக அப்பகுதியின் திருச்சபை மேய்ப்புப் பணியாளர்கள் அனைவருக்கும் தமது ஆசீரை அளித்து அவர்களை ஊக்கப்படுத்துவதாகவும் தெரிவித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.








All the contents on this site are copyrighted ©.