2008-11-07 17:36:32

வத்திக்கான் திருப்பீடத்துக்கான லித்துவேனியக் குடியரசின் புதிய அரசுத் தூதரை வரவேற்றுப் பேசினார் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் . 07, நவம்பர் ,08 .


இந்த வெள்ளி காலை லித்துவேனியா நாட்டின் அரசுத்தூதர் திரு. வித்தோத்தாஸ் அலிசோஸ்காஸ் அவரது சான்றுப் பத்திரங்களைத் திருத்தந்தையிடம் கொடுத்தார் . அவரை வரவேற்றுச் சான்றுப் பத்திரங்களைத் திருத்தந்தை பெற்றுக் கொண்டார் . திரு. அலிசோஸ்காஸ் கூறிய வாழ்த்துச் செய்திகளுக்கும் , லித்துவேனியாவின் குடியரசுத்தலைவர் வால்தாஸ் ஆதாம்குஸ் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்திகளுக்கும் திருத்தந்தை நன்றி கூறினார் . நற்செய்தியின் வழிகாட்டுதலில் ஐரோப்பிய நாடுகள் வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும் எனத் தொடக்கத்தில் தூதர் அலிசோஸ்காஸ் கூறியது தமக்கு மகிழ்ச்சி அளித்ததாகத் திருத்தந்தை கூறினார் . புனித கசிமீருக்கும் முன்னைய பாரம்பரியத்தில் வேரூன்றியது லித்துவேனியா நாட்டின் கிறிஸ்தவம் . இடையில் வந்த வேற்று ஆட்சியாளர்கள் காலத்திலும் லித்துவேனியா கிறிஸ்துவத்தை அங்கு விசுவாசத்தோடு கடைப்பிடித்ததாகக் கூறினார் திருத்தந்தை . துன்பங்கள் வரும்போது பகிர்ந்து வாழும் விசுவாசம் உறுதிபெறும் என முந்நாள் திருத்தந்தை 2 ஆம் ஜான் பால் அனுபவ ரீதியாகக் கூறியதை எடுத்துக்கூறிய திருத்தந்தை , அவ்வாறு ஒன்றுபட்டு வாழும் கிறிஸ்தவர்கள் நாம் கடவுளில் மட்டுமே உண்மையான மகிழ்ச்சியைப் பெறமுடியும் என்பதை நன்கறிவார்கள் என்றும் கூறினார் .



கம்யூனிசத்தில் வளர்ந்த இன்றைய இளைய சமுதாயம் இதை உணர்வதில்லை என்றார் திருத்தந்தை . வத்திக்கான் திருப்பீடம் லித்துவேனியா நாட்டுடன் கொண்டுள்ள தூதரக உறவை பெரிதும் போற்றுவதாகத் திருத்தந்தை மேலும் கூறினார் . லித்துவேனிய நாட்டின் வத்திக்கானுக்கான புதிய தூதர் அலிசோஸ்காஸின் தூதரகப் பணி இரு நாடுகளுக்குமிடையே நல்லுறவை வலுப்படுத்தும் என நம்பிக்கை தெரிவித்துத் தூதருக்கும் , குடும்பத்தினருக்கும் , நாட்டினருக்கும் நல் வாழ்த்தையும் இறை ஆசியையும் வழங்கினார் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் .








All the contents on this site are copyrighted ©.