2008-10-30 18:54:50

சமயக்கலந்துரையாடலுக்கான அகில உலக யூத குலக் குழுவினரைத் திருத்தந்தை வரவேற்றுப் பேசினார் . 301008.


அக்டோபர் 30 , இந்த வியாழன் காலை அகில உலக யூத சமய குழுவைத் திருத்தந்தை வரவேற்று , கடந்த 30 ஆண்டுகளாக இரு சமயங்களும் பலனுள்ள முறையில் சமய ஒற்றுமைக்காகக் கலந்து பேசுவதாகத் திருத்தந்தை பாராட்டினார் . இரு சமயத்தவரும் ஒருவர் மற்றவரைப் புரிந்து கொள்ளவும் , ஏற்றுக் கொள்ளவும் இக் கலந்துரையாடல்கள் வழிசெய்துள்ளதாகத் திருத்தந்தை கூறினார் . வத்திக்கான் திருச்சங்கத்தின் வரலாற்று முக்கியம் வாய்ந்த நமது காலம் என்ற கொள்கைத் திரட்டை திருச்சபை அமல் படுத்துவதில் முனைப்பாக உள்ளதாகத் திருத்தந்தை தெரிவித்தார் . அக்கொள்கைத்திரட்டு யூத குலத்துக்கு எதிரான கருத்துக்களைக் கண்டித்துள்ளது. யூதர்களும் கத்தோலிக்கத் திருச்சபையும் இறையியல் கொள்கைகளைப் புதுப்பித்துக்கொள்ள திருச்சங்க ஏடுகள் நல்லதொரு அழைப்பைவிடுத்துள்ளதாகத் திருத்தந்தை மேலும் கூறினார். கடவுள் தந்தை அளப்பரிய அன்பினால் தேர்ந்து கொள்ளப்பட்ட இறைமக்கள் வழியாக மிகப்பெரிய ஆன்மீகச் செல்வத்தைத் தந்துள்ளார் என்பதை எல்லாக் கிறிஸ்துவர்களும் உணர்ந்துள்ளார்கள் எனத் திருத்தந்தை மேலும் கூறினார். கடந்த சில காலங்களில் யூதகுல குழுக்களை நியூயார்க் ,பாரிஸ் , மற்றும் வத்திக்கானில் சந்திக்கும் வாய்ப்பு தமக்கு மகிழ்ச்சி அளித்ததாகத் திருத்தந்தை கூறினார் . அடுத்தமாதம் புதாபெஸ்ட்டில் நடக்கவுள்ள சமயமும் சமுதாயமும் என்ற கத்தோலிக்க மற்றும் யூதகுல சமயத்தவரின் கருத்தரங்கு வெற்றிபெற வாழ்த்துக்கூறி , அவர்களுக்கும் குடும்பங்களுக்கும் இறையாசி வழங்கினார் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் .








All the contents on this site are copyrighted ©.