2008-10-29 17:52:38

திருத்தந்தையின் புதன் மறைபோதகம் . 29-அக்டோபர் 08.


இன்றும் திருத்தூதர் பவுல் பற்றி மறைபோதகம் வழங்கினார் . திருத்தூதரின் போதகத்தில் மையமாக இருக்கும் இயேசுக்கிறிஸ்துவின் திருச்சிலுவைபற்றிக் காண்போம் என்றார் திருத்தந்தை . டமாஸ்கஸ் செல்லும் வழியில் இயேசவைச் சந்தித்த திருத்தூதர் பவுல் , அவருக்காகவும் , மற்றனைவருக்காகவும் இயேசு மரித்து , உயிர்த்தார் என்பதை நன்றாக உணர்ந்து கொண்டார் . சிலுவையின் மறை உண்மை , கடவுளுடைய இரக்கத்தையும் , மீட்பளிக்கும் அன்பையும் தெளிவுபடுத்தியது . திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்குக் கூறியதுபோல , அவர் அடுக்குமொழியில் பேச வரவில்லை, மாறாக ,கிறிஸ்துவைப்பற்றி ,அதுவும் சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப்பற்றிப் போதனை செய்ய வந்ததாகக் கூறினார் . யூதர்களுக்குத் தடையாகவும் , பிற இனத்தார்க்கு மடமையாகவும் தெரியும் சிலுவை , கடவுளுடைய ஞானத்தையும் , சக்தியையும் வெளிப்படுத்துவதாகக் கூறுகிறார் திருத்தூதர் பவுல் அடிகளார். பாவம்புரிந்த மனித குலத்துத்துக்கு உச்சக்கட்ட அன்பின் அடையாளமாக , சிலுவை , உண்மையான ஞானத்தைப்பெற அழைப்பு விடுக்கிறது. அந்த ஞானம் என்ன வென்றால் கடவுள் இலவசக் கொடையாகக் கொடுக்கும் கடவுளின் இரக்கமுள்ள, மீட்பளிக்கும் அன்பைப் பெற்றுக் கொள்வதாகும். நம் பாவங்களுக்காகக் கிறிஸ்து சிலுவையில் தம்மையே அர்ப்பணமாக்கினார் . அவரது இரத்தத்தின் வழியாக கடவுளோடு நம்மை ஒன்றிணைக்கும் பலியானார் . சிலுவையில் அறையுண்ட கிறிஸ்து ஆண்டவரில் நம்பிக்கை கொள்வது என்பது , நாமும் நம் உடலை அதன் இச்சைகளோடு சிலுவையில் அறைந்து , இயேசுவின் சாவிலும் , உயிர்ப்பிலும் பங்கேற்பதாகும் எனத் திருத்தூதர் பவுல் கூறுகிறார் . சிலுவையின் வலு இன்மையில், நாம் கடவுளுடைய அன்பின் வல்லமையைக் காண்கிறோம் ., என்று மறைபோதகம் வழங்கி , வந்திருந்த அனைவருக்கும் வாழ்த்துதுக்கூறி தமது அப்போஸ்தலிக்க ஆசியை வழங்கினார் நம் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் .








All the contents on this site are copyrighted ©.