2008-10-25 15:31:45

12வது உலக ஆயர்கள் மாமன்றத்தின் இறுதிச் செய்தி – ஒவ்வொரு கத்தோலிக்கரும் விவிலியத்தை வைத்திருக்க வேண்டும்


அக்.25,2008. ஒவ்வொரு கத்தோலிக்க குடும்பமும் திருவிவிலியத்தை வாசித்து செபிப்பதற்கு உதவியாக அதனைத் தங்கள் வீடுகளில் காணக்கூடிய விதத்தில் மரியாதையுடன் வைத்து பாதுகாக்க வேண்டும் என்று 12வது உலக ஆயர்கள் மாமன்றப் தந்தையர்களின் இறுதிச் செய்தி வலியுறுத்துகிறது.

இவ்வுலக ஆயர்கள் மாமன்றத்தின் இறுதிச் செய்தியைத் தயாரித்த குழுவின் தலைவரான பேராயர் ஜான்பிராங்கோ ரவாசி நேற்று நிருபர் கூட்டத்தில் வெளியிட்ட இச்செய்தியானது, 100க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து கலந்து கொள்ளும் 253 மாமன்றப் தந்தையர்களின் ஏகமனதான ஒப்புதலை பெற்றுள்ளது.

கத்தோலிக்கர்கள் இறைவார்த்தை மீது காட்டும் பக்தியானது, அவர்களைச் செபத்திற்கும், பிறரன்புச் செயல்கள் செய்வதற்கும், பிற கிறஸ்தவர்களுடன் ஒன்றிப்பு கொள்ளவும், நன்மனம் கொண்ட மக்கள் அனைவருடனும் உரையாடல் நடத்தவும் இட்டுச் செல்கின்றது என்று அச்செய்தி கூறுகிறது.

உலகின் ஏறத்தாழ 110 கோடி கத்தோலிக்கர்க்கென வெளியிடப்பட்ட இச்செய்தி, நம்பிக்கை மற்றும் மீட்பை அறிவிக்க வந்த இயேசு போல கிறஸ்தவர்களும் இந்த நம்பிக்கையின் இறைவார்த்தையை ஏழைகள், துன்புறுவோர் ஆகியோருடன் பகிர்ந்து கொண்டு அதனை அறிவிப்பதற்கான பணியைக் கொண்டுள்ளார்கள் என்று தெரிவிக்கிறது.

உண்மை மற்றும் வாழ்வின், புனிதம் மற்றும் அருளின், நீதியின், அன்பின், அமைதியின் கடவுளரசில் விசுவாசத்திற்குச் சாட்சி சொல்வதன் மூலம் இறைவார்த்தை அறிவிக்கவும் அச்செய்தி அழைப்புவிடுக்கிறது.

இறைவார்த்தையைக் கருத்தூன்றி கேட்பதென்பது, அதற்குப் பணிந்து அதன்படி செயல்படுவதாகும், அதாவது வாழ்க்கையில் நீதியையும் அன்பையும் மலரச் செய்வதாகும் என்றும் கூறும் அச்செய்தி, கடவுளின் வார்த்தையை மற்றவர்களுக்கு விளக்கினால் மட்டும் போதாது, மக்கள் தாங்கள் செய்யும் நற்காரியங்களின் மூலம் கடவுளின் நன்மைத்தனத்தைப் பிறர் பார்க்கவும் அனுபவிக்கவும் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

இறைமக்களின் கவனத்துக்கு நான்கு முக்கிய கருத்துக்களை முன்வைத்துள்ள ஆயர்கள் மாமன்றப் பிரதிநிதிகள், இக்கருத்துக்களை, இறைவார்த்தையின் குரல்-வெளிப்பாடு, இறைவார்த்தையின் முகம்–இயேசு கிறிஸ்து, இறைவார்த்தையின் வீடு-திருச்சபை, இறைவார்த்தையின் சாலைகள்-மறைப்பணி ஆகிய நான்கு பிரிவுகளில் வெளிப்படுத்தியுள்ளனர்.

திருமறைநூலின் முழுமையான மற்றும் ஒருசீர்மை கொண்ட பொருளை கிறிஸ்து நமக்கு வெளிப்படுத்திகிறார் என்றுரைக்கும் செய்தி, கிறிஸ்தவம், தந்தையை வெளிப்படுத்திய இயேசு கிறிஸ்து என்ற மனிதரை மையம் கொண்டுள்ளது, இவரே இறைவார்த்தையை நாம் புரிந்து கொள்வதற்கு உதவுகிறார் என்றும் உரைக்கின்றது.

இன்றைய நவீன எலெக்ட்ரானிக் சமூகத்தொடர்பு சாதனங்கள் உள்ளிட்ட உலகின் அனைத்துச் சாலைகளிலும் இறைவார்த்தை பயணம் செய்ய வேண்டும் என்று குறிப்பிடும் அச்செய்தி, திருவிவிலியம், குடும்பங்களிலும், பள்ளிகளிலும், அனைத்து கலாச்சார சூழல்களிலும் ஊடுருவ வேண்டும், திருவிவிலியத்தின் உருவக, கவிதை வடிவ மற்றும் உரைநடை வளமையானது, அசிங்கத்தினாலும் மனிதப்பண்பற்ற தன்மையினாலும் உருக்குலைந்து இருக்கின்ற உலகில், விசுவாசம் மற்றும் கலாச்சார அழகின் அடையாளமாகத் திகழ்கின்றது என்றுரைக்கிறது..

இருந்தபோதிலும், திருவிவிலியம் இப்பூமியினின்று எழும் துன்பத்தின் மூச்சையும் வெளிப்படுத்துகின்றது. நசுக்கப்படுபவரின் அழுகுரலை எட்டுகின்றது. அதன் உச்ச கட்டமாக, இருப்பது திருச்சிலுவை. இதில் கிறிஸ்து தனிமையையும் கைவிடப்பட்ட நிலையையும் துன்பம் மற்றும் மரணத்தின் துயர நாடகத்தையும் அனுபவித்தார். உண்மையில் இறைமகன் இதில்தான் தீமை மற்றும் மரணத்தின் இருளை பாஸ்கா ஒளியாலும் மகிமையின் நம்பிக்கையாலும் சுடர்விடச் செய்தார் என்று மேலும் உரைக்கிறது.

பிற மதங்களின் விசுவாசமுள்ள ஆண்களும் பெண்களும் கிறிஸ்தவர்களோடு சேர்ந்து அமைதி மற்றும் ஒளி நிறைந்த உலகை சமைக்க முடியும் என்று குறிப்பிட்டு கிறிஸ்தவர்கள் தங்கள் சொந்த ஆன்மீகத் தனித்தன்மையை கீழ்மைப்படுத்திவிடாமல் பிற மதத்தவரோடு நன்மதிப்புடன் உரையாடலில் ஈடுபட வேண்டும் என்று அழைப்புவிடுக்கிறது.

கிழக்கின் பெரும் சமய மரபுகள் தங்களது புனித நூல்களிலிருந்து நமக்குக் கற்பிக்கும் வாழ்வை மதித்தல், தியானம், மௌனம், துறத்தல், தியாகப்பலி, திருப்பயணம், நோன்பு, புனித அடையாளங்கள், குடும்ப சமூக மதிப்பீடுகள் போன்றவைகளோடு கிறிஸ்தவ சமுதாயம் பொதுவான நல்லிணக்கத்தைக் காண்கிறது என்று அச்செய்தி குறிப்பிட்டுள்ளது. கோத்தியர்களுக்கு நற்செய்தி ஐரோப்பாவின் தாய்மொழியாக இருந்தது. திருவிவிலியம் உலகளாவிய கலாச்சாரத்திற்கு பெரும் அறநெறி விதிமுறையாக இருக்கின்றது என்றவாறெல்லாம் வர்ணித்துள்ள அச்செய்தி, திருச்சபை இறைவார்த்தையை எல்லாக் கலாச்சாரங்களிலும் ஒலிரச் செய்யுமாறு அழைப்புவிடுக்கிறது.

தேனினும் இனிமையான இறைவார்த்தையை கேட்பதற்கு உள்ளார்ந்த அமைதியில் நிலைத்திருப்போம். அது தொடர்ந்து நம்மில் குடிகொண்டு நம்மில் வாழ்ந்து நம்மிடம் பேசட்டும் என்று கேட்டுள்ளனர் மாமன்றத் தந்தையர்.

திருச்சபையின் வாழ்விலும் பணியிலும் இறைவார்த்தை என்ற தலைப்பில் வத்திக்கானில் இம்மாதம் 5ம்தேதி தொடங்கிய இவ்வுலக ஆயர்கள் மாமன்றம் இஞ்ஞாயிறு காலை திருத்ந்தை 16ம் பெனடிக்ட் வத்திக்கான் பேதுரு பசிலிக்காவில் நடத்தும் திருப்பலியுடன் நிறைவு பெறும்.

 








All the contents on this site are copyrighted ©.