2008-10-22 17:51:50

திருத்தந்தையின் புதன் மறைபோதகம் . 22-அக்.-08 .


இன்றைய புதன் மறைபோதகம் தூய பேதுரு பசிலிக்கா வளாகத்தில் நடந்தது.

வந்தவர்களை வாஞ்சையோடு வரவேற்றார் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட்.

கடந்த வாரங்களில் போல இன்றும் திருத்தந்தை திருத்தூதர் பவுல் அடிகளாரின் இறையியல் சிந்தனைகள் பற்றி மறைபோதகம் செய்தார் .



தூய பவுல் அடிகளாரின் போதகத்தின் மையப்பொருள் கிறிஸ்துவே என்பது பற்றி இன்று பார்ப்போம் என்றார் திருத்தந்தை . சிலுவையில் அறையப்பட்ட , உயிர்த்தெழுந்த கிறிஸ்து திருச்சபைக்குள் உயிரோடு பிரசன்னமாக இருப்பதாகக் கூறுகிறார் தூய பவுல் அடிகளார் . கிறிஸ்து மனு உரு எடுத்ததையும் , மகிமைப்படுத்தப்பட்டதையும் , அதோடு , உலகம் உருவாவதற்கு முன்னரே கடவுள் தந்தையோடு இருந்ததாகவும் கூறுகிறார் .ஆதியிலிருந்து கடவுளோடு இருந்தார் என்பது விவிலியத்தின் பழைய ஏற்பாட்டு நூலில் கடவுளின் ஞானமாக உலகின் தொடக்க காலத்திலிருந்து இருந்ததாக வரும் பகுதிகள் கிறிஸ்துவைக் குறிப்பதாகவும் , மனிதர்களோடு வந்து தங்குவதாகவும் தூய பவுல் அடிகளார் உறுதிபடக் கூறுகிறார் . கிறிஸ்துவை இவ்வாறு கடவுளின் ஞானமாகக் கருதும் தூய பவுல் அடிகளார் , கடவுள் தந்தை ஊழிக்காலம் தொடங்கிக் கொண்டிருந்த மீட்புத் திட்டத்தில் கிறிஸ்து மையமாகவும் , முடிவான முழுமையாகவும் உள்ளதாகக் கூறுகிறார் . திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய மடலில் வரும் கிறிஸ்துவைப்பற்றிய கீதத்தில் கிறிஸ்து கடவுள் தன்மையில் தொடக்க காலம் தொட்டு இருந்ததாகவும் , பின்னர் தம்மையே வெறுமையாக்கி சாவை , அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்கு தாழ்நிலையை ஏற்றுக்கொண்டார் எனவும் கூறுகிறார் . கடவுளுக்கும் மனிதருக்குமிடையே இருக்கும் ஒரே நடுவர் கிறிஸ்து எனக் கூறும் தூய பவுல் அடிகளார் , அவர் ஆதியிலிருந்து இருக்கும் தன்மையையும் , மனித உரு எடுத்ததையும் எடுத்துக் கூறுகிறார் . கிறிஸ்துவே படைப்புக்களில் எல்லாம் முதன்மையானவர் என்றும் , திருச்சபையின் தலையானவர் என்றும் தூய பவுல் அடிகளார் கூறுகிறார் . பவுல் அடிகளாரின் ஞானம் நிறைந்த கிறிஸ்துவைப் பற்றிய இறையியல் நாம் சிலுவையில் அறையுண்ட மற்றும் உயிர்த்தெழுந்த இயேசு , கடவுளின் ஞானமாகவும் சக்தியாகவும், ஆதி மைந்தராகவும் இருக்கும் இயேசு, அளிக்கும் மீட்பை வரவேற்க நம்மை அழைக்கிறது என்று மறைபோதகம் வழங்கி , வந்திருந்தோர்க்கும் , அவர்கள் குடும்பங்களுக்கும் மகிழ்ச்சியும் அமைதியும் நிறைந்த அப்போஸ்தலிக்க ஆசியை வழங்கினார் நம் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் .








All the contents on this site are copyrighted ©.