2008-10-21 13:51:35

மருத்துவர் நோயாளிகளின் மாண்பை எப்பொழுதும் பாதுகாக்க வேண்டும் - திருத்தந்தை


அக்.21,2008. மேலும், ஒருவரின் நோய் குணமாக்க முடியாததாக இருந்த போதிலும் மருத்துவர்கள் நோயாளிகளின் மாண்பை எப்பொழுதும் பாதுகாக்க வேண்டும் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.

இத்தாலிய அறுவை சிகிச்சை கழகம் நடத்திய 110 வது தேசிய கருத்தரங்கில் கலந்து கொண்டவர்களிடம் இவ்வாறு உரைத்த திருத்தந்தை, நோயாளிக்கும் மருத்துவருக்குமிடையே பரஸ்பர நம்பிக்கை இருப்பது மிகவும் இன்றியமையாதது என்பதை வலியுறுத்தினார்.

நோயாளியை குணமாக்க முடியாது என்ற நிலை இருந்த போதிலும்கூட, அந்நோயாளியின் விலைமதிப்பிடப்பட முடியாத மாண்பு மதிக்கப்படுவதற்கான உரிமையைக் கொண்டுள்ளார் என்ற அவர், இதன் மூலம் அவரின் துன்பம் நீக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

ஒரு மருத்துவரைப் பிரித்துக் காட்டுவது அவரின் மனிதப் பண்புகள் என்பதையும் சுட்டிக் காட்டிய திருத்தந்தை, அவரின் மனிதாபிமானப் பண்புகள் மூலம் அவர் நோயாளியை உளம் மற்றும் உடலளவில் உறுதிப்படுத்த முடியும் என்றார்.

இக்காலத்திய மருத்துவ முன்னேற்றம் பற்றியும் குறிப்பிட்ட அவர், நோயாளியை குணமாக்க வேண்டும் அல்லது அந்நோய் முற்றிய நிலையிலும் வேதனையைக் குறைக்கவாவது முயற்சிக்க வேண்டும் என்றார்.








All the contents on this site are copyrighted ©.