2008-10-20 17:15:52

யாத் வாஷெம் அருங்காட்சியகத்தில் திருத்தந்தை 12ம் பத்திநாதர் குறித்து வைக்கப்பட்டுள்ள தவறான வாசகங்கள் திருத்தந்தையின் புனித பூமிக்கான திருப்பயணத்திற்குத் தடையாக இருக்காது - திருப்பீடப் பேச்சாளர்


அக்.20,2008 நாத்ஸி வதைப்போர் முகாம்களில் உயிரிழந்தோரின் நினைவாகக் கட்டப்பட்ட யாத் வாஷெம் அருங்காட்சியகத்தில் திருத்தந்தை 12ம் பத்திநாதர் குறித்து வைக்கப்பட்டுள்ள தவறான வாசகங்களோ அத்திருத்தந்தையை முத்தி பெற்றவராக அறிவிப்பதற்கு யூதர்களிடம் இருந்து வரும் எதிர்ப்போ திருத்தந்தையின் புனித பூமிக்கான திருப்பயணத்திற்குத் தடையாக இருக்காது என்று திருப்பீடப் பேச்சாளர் பெதெரிக்கோ லொம்பார்தி கூறினார்.

ஜெர்மானிய சர்வாதிகாரி அடோல்ப் ஹிட்லரால் யூதர்கள் சித்ரவதைப்படுத்தப்பட்டு கொல்லப்பட்ட போது அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் திருத்தந்தை 12ம் பத்திநாதர் மௌனம் காத்தார் என யூதஅருங்காட்சியகத்தில் அத்திருத்தந்தையின் புகைப்படத்துடன் குற்றம் சாட்டப்பட்டிருப்பது பற்றியும் குறிப்பிட்ட திருப்பீடப் பேச்சாளர், திருத்தந்தை 12ம் பத்திநாதரை முத்தி பெற்றவராக அறிவிப்பதற்கான படிகளைத் துவக்குவதற்குப் பாப்பிறை 16ம் பெனடிக்ட் இன்னும் ஒப்புதல் வழங்கி கையெழுத்திடவில்லை எனவும் தெரிவித்தார்.

இஸ்ரயேல் நாட்டிற்கான திருத்தந்தையின் திருப்பயணம் குறித்து இதுவரை எவ்விதத் திட்டமும் இல்லை என மேலும் கூறினார் திருப்பீடப் பேச்சாளர் பெதெரிக்கோ லொம்பார்தி.

 








All the contents on this site are copyrighted ©.