2008-10-19 19:19:02

திருத்தந்தை போம்பே மாதா ஆலயத்தில் திருப்பலி .19 அக்டோபர்.08


இத்தாலியில் உள்ள போம்பே செபமாலை மாதா ஆலயம் பிரசித்தி பெற்றது . வத்திக்கானில் நடந்துவரும் உலக ஆயர்கள் மாமன்றம் வெற்றிபெறுவதற்காகவும் , மறைபரப்பு நாடுகளில் கிறிஸ்துவின் நற்செய்திக்கு தம் வாழ்வாலும் வார்த்தையாலும் சான்று பகரும் அனைத்து மறைபரப்பாளர்களுக்காக மன்றாடுவதற்காகவும் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் இத்தாலியின் போம்பேயிலுள்ள செபமாலை அன்னை ஆலயத்திற்குத் திருப்பயணமாக இந்த ஞாயிறு அன்று சென்று திருப்பலி நிகழ்த்தினார் . உலகமனைத்திற்கும் ஆண்டவரின் அருளை அள்ளித்தர தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவருடைய அடையாளமாக விளங்கும் அன்னை மரியாவின் நற்செய்தி அறிவிப்புப் பணிபற்றித் திருத்தந்தை எடுத்தியம்பினார் . முத்தி பெற்ற பார்த்தோ லோங்கோவின் வாழ்வைச் சுட்டிக்காட்டி இன்றும் திருப்பணியாளர்களுக்கு எதிராகச் செயல்படுவதும் மூடப்பழக்க வழக்கங்களும் இல்லாமல் இல்லை எனத் திருத்தந்தை கூறினார் . இறைவார்த்தையை அன்னைமரியிடம் ஒப்புக்கொடுத்தார் திருத்தந்தை. அவருடைய திரு உதரத்தில்தான் இறைவாக்கு மனு உரு எடுத்தது. அன்னைமரியின் வழியாக ஒவ்வொரு கிறிஸ்தவ குழுமமும் புதுப்பிக்கப்பெறவும், அன்னையின் பரிந்துரையால் உலகெங்கும் நற்செய்தியை அறிவிக்க முழுமூச்சாகப் பணிசெய்வோர் தங்கள் ஆற்றல்களை இன்னும் சீர்மைப்படுத்தவும் செபமாலை அன்னை வழிநடத்துமாறு திருத்தந்தை அவரிடம் மன்றாடுவதற்காகவும் போம்பே சென்றிருந்தார் . போம்பே மாதா ஆலயம் இத்தாலியில் நேப்பிள்ஸ் மாநகருக்கு அருகே உள்ளது. அங்குள்ள ஆலயத்தை முத்தி பெற்ற பார்த்தோலோங்கோ சென்ற நூற்றாண்டில் அன்னைக்கு அர்ப்பணித்தார் . இவ்வாலயம் அன்னை மரியாவி தந்த சிறப்பான அன்பளிப்பு எனக்கூறினார் திருத்தந்தை . தம் இளமைக் காலத்தில் திருப்பணியாளர்களுக்கு எதிராகவும், ஆவிகளையும் மூடப்பழக்க வழக்கங்களையும் நம்பிக்கொண்டிருந்த ஒருவர் மனம் மாறிய பிறகு இந்த ஆலயத்தை நனவாக்கியிருக்கிறார் என்றார் திருத்தந்தை. அக்டோபர் மாதம் மறைபரப்பதலுக்காகவும் , ஜெபமாலையை பக்தியோடு செபிப்பதற்காகவும் ஒப்புக்கொடுக்கப்பட்ட மாதம் , என்ற திருத்தந்தை எனவே இன்று சிறப்பாக நாம் இந்த ஆலயத்தில் இக்கருத்துக்களுக்காகச் செபிப்போம் என்றார் .








All the contents on this site are copyrighted ©.