2008-10-18 13:26:49

தாய்மார்களுக்கு விவிலியத்தில் பயிற்சி அளிக்கப்பட வேண்டும் – பேரவைத் தந்தையர்கள்


அக்.21,2008 இறைவார்த்தை வாழ்வில் மையம் கொண்டிருப்பதற்கு பயிற்சி முறைகளில் மாற்றம் தேவை என்று உருகுவாய் நாட்டு விவிலிய பேராசிரியர் அருட்திரு டானியேல் பாப்லோ கெர்பர் மாஸ் கூறினார்.

235 பேரவைத் தந்தையர்கள் பங்கு கொண்ட இன்று உலக ஆயர்கள் மாமன்றத்தில் உரையாற்றிய அருட்திரு கெர்பர் மாஸ், நற்செய்தி அறிவிப்பதற்காகவே திருச்சபை இருக்கின்றது என்றார்.

இன்னும் இப்பொது அமர்வில் உரையாற்றிய வெனேசுவேலா நாட்டு சலேசிய நிறுவனத்தில் பணியாற்றும் பேராசிரியர் ரிகோபெர்த்தோ ஆன்காரித்தா, சிறு குழுக்களில் விவிலியத்தைத் தியானித்து அதன்படி வாழ்வதற்கான வழிமுறைகளைத் திட்டமிடுவது எளிது என்றார்.

இவ்வமர்வில் பேசிய காங்கோ ஜனநாயகக் குடியரசின் துறவு சபைகளின் கூட்டமைப்புத் தலைவர் அருட்சகோதரி யூப்ராசியெ பேயா, இறைவார்த்தையை அறிவிப்பதில் ஆப்ரிக்கப் பெண்களின் பங்கு பற்றி விளக்கினார்.

குடும்பங்களில் புனித நூல்கள் பற்றிக் குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்வதில் தாய்மாரின் பங்கு முக்கியம் என்பதால் ஆப்ரிக்கப் பெண்களுக்கு, குறிப்பாகத் தாய்மார்களுக்கு விவிலியத்தில் பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்றும் அருட்சகோதரி பேயா வலியுறுத்தினார்.



 








All the contents on this site are copyrighted ©.