2008-10-18 13:29:12

இறைவார்த்தை பற்றி உலக மாநாடு நடத்தப்பட வேண்டும் - உலக ஆயர்கள் மாமன்றம்


அக்.18,2008. கத்தோலிக்கத் திருச்சபையில் விவிலியம் இன்னும் பெருமளவில் அறியப்படுவதற்கு கடினமாக உழைக்க வேண்டும் என்று ப்ரெஞ்ச் மொழி பேசும் உலக ஆயர்கள் மாமன்றப் பிரதிநிதிகள் குழு பரிந்துரைத்தது.

திருச்சபையின் வாழ்விலும் பணியிலும் இறைவார்த்தை என்ற தலைப்பில் வத்திக்கானில் நடைபெற்று வரும் 12வது உலக ஆயர்கள் மாமன்றத்தில் மொழிவாரிக் குழுக்களாகப் பிரிந்து விவாதித்த பின்னர் அம்மாமன்றத்தின் பொது அமர்வில் நேற்று தனது பரிந்துரைகளைச் சமர்ப்பித்த ப்ரெஞ்ச் மொழி பேசும் குழு, விவிலியம் திருச்சபையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் ஆன்மீக ஊட்டச்சத்தாக மாற வேண்டும் என்பதற்கான பரிந்துரைகளையும் சமர்ப்பித்தது.

விவிலியத்தை இன்னும் பெருமளவில் பரப்புவதற்கு அது மேலும் அதிக மொழிகளில் மொழி பெயர்க்கபப்ட வேண்டும், விவிலிய வாசிப்பானது, குடும்பங்கள் தொடங்கி பங்குகளில் மாலை நேரங்களில் இடம் பெற வேண்டும், இறைவார்த்தையைக் கேட்பதற்குக் கற்றுக் கொடுக்கப்பட வேண்டும், இறைவார்த்தை பற்றி உலக மாநாடு நடத்தப்பட வேண்டும், யூதர்களுடன் உரையாடல் நடத்த வேண்டும், 5வது நற்செய்தியாகிய புனித பூமிக்கு திருப்பயணம் மேற்கொள்ள வேண்டும், பெண்கள் வார்த்தையை எடுத்துச் சொல்பவர்கள் என்பதால் அவர்களுக்கு, குறிப்பாக தாய்மாருக்கு இறைவார்த்தை பற்றிய தகுந்த பயிற்சிகள் கொடுக்கப்பட வேண்டும் போன்ற பரிந்துரைகளைச் சமர்ப்பித்தது ப்ரெஞ்ச் மொழி பேசும் குழு.

இம்மாமன்றத்தில் பரிந்துரைகளைச் சமர்ப்பித்த ஆங்கில மொழி பேசும் குழு, இறைவார்த்தையை அடிப்படையாகக் கொண்ட மேய்ப்புப்பணி திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும், இளையோர் தங்களையொத்த வயதினரிடம் நற்செய்தியை எடுத்துச் செல்பவர்கள் என்ற முறையில் அவர்கள் இறைவார்த்தையை அறிந்து அன்பு செய்வதற்கு வழி செய்யப்பட வேண்டும், பொதுநிலையினரின் நற்செய்தி பணிக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கூறியது.

மேலும் மொழிவாரியாக இல்லாமல் கண்டம் வாரியாக குழு விவாதங்கள் இடம் பெறுவதையும் இக்குழுக்கள் பரிந்துரைத்தன.








All the contents on this site are copyrighted ©.