2008-10-18 13:27:57

82வது உலக மறைபரப்பு ஞாயிறு - கிறிஸ்துவையும் அவரது மீட்பளிக்கும் செய்தியையும் அறிவிப்பது ஒவ்வொரும் உடனடியாகச் செய்ய வேண்டியது – திருத்தந்தை 16ம் பெனடிக்ட்


அக்19,2008. இன்று கடைப்பிடிக்கப்படும் 82வது உலக மறைபரப்பு ஞாயிறுக்கென செய்தி வெளியிட்ட திருத்தந்தை, இந்த நம் காலத்தில் நற்செய்தி அறிவிக்க வேண்டியதன் அவசியத்தைச் சிந்திக்க அழைப்பதாக தமது செய்தியைத் தொடங்கியுள்ளார். திருமுழுக்குப் பெற்ற ஒவ்வொருவருக்கும் இம்மறைப்பணி அழைப்பு தொடர்ந்து முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கின்றது. புனித பவுல் யூபிலி ஆண்டை சிறப்பிககும் இவ்வாண்டில் இம்மறைப்பணிக்குப் புனித பவுலை எடுத்துக்காட்டாக முன் வைக்க விரும்புவதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

மனித சமுதாயம் விடுதலை பெறவும் மீட்கப்படவும் வேண்டிய தேவையில் இருக்கின்றது. உலகின் இன்றைய நிலையை மிகக் கவனமாக நோக்கினால், ஒருபக்கம் சர்வதேச அளவில் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கான நம்பிக்கை தரும் கூறுகளைக் காண முடிகின்றது. மறுபக்கம் வருங்கால மனிதன் குறித்த மிகுந்த கவலையைத் தருகின்றது. பல விவகாரங்களில் மனிதனுக்கும் மக்களுக்குமிடையேயான உறவுகளை வன்முறை குறித்து நிற்கின்றது. ஏழ்மை, இலட்சக்கணக்கான மக்களை நசுக்குகின்றது. பாகுபாடும் சிலவேளைகளில் இனம், கலாச்சாரம், சமயம் ஆகியவை காரணமாக இடம் பெறும் அடக்குமுறைகளும் மக்கள் தங்கள் நாட்டை விட்டு வேறு நாடுகளில் புகலிடமும் பாதுகாப்பும் தேட வைக்கின்றன. மனித மாண்பையும் மனித நலனையும் முக்கியமாகக் கருதாத தொழிற்நுட்ப முன்னேற்றம் அதன் சக்தியை இழக்கிறது. வளங்கள் பாகுபாடின்றி பயன்படுத்தப்படுவதால் மனிதனுக்கும் சுற்றுச் சூழலுக்கும் இடையேயான உறவும் தொடர் அச்சுறுத்தலை எதிர் நோக்குகிறது. மனிதனின் வாழ்வு பல வடிவங்களையும் பல அர்த்தத்தையும் எடுப்பதால் மனித சமுதாயத்தின் எதிர்காலமும் அச்சுறுத்தலில் வைக்கப்பட்டுள்ளது. இத்தகைய ஒரு நிலையில் மனித சமுதாயத்திற்கு எதிர்காலம் இருக்கிறதா? இந்த எதிர்காலம் எப்படி இருக்கும்? இக்கேள்விகளுக்கான பதில் நம்பிக்கை கொள்வோருக்கு நற்செய்தியிலிருந்து கிடைக்கின்றது. மனித சமுதாயம் கிறிஸ்துவில் மட்டுமே மீட்பையும் நம்பிக்கையையும் காண முடியும் என்பதை புனித புவுல் நன்குப் புரிந்திருந்தார். எனவேதான் அவர், இயேசு கிறிஸ்து அருளும் வாக்குறுதியை அறிவிப்பது தன்மேல் சுமத்தப்பட்ட கடமை என்று உணர்ந்தார். கிறிஸ்து இன்றி மனித சமுதாயம் நமபிக்கையின்றியும் உலகில் கடவுளன்றியும் இருக்கும் என்பதை அவர் உணர்ந்திருந்தார். எனவேதான் கிறிஸ்துவையும் அவரது மீட்பளிக்கும் செய்தியையும் அறிவிப்பது ஒவ்வொருவரின் கடமையாகிறது. நற்செய்தியை அறிவிக்காவிடில் ஐயோ எனக்குக் கேடு என்று பவுல் சொன்னார். கிறிஸ்து மீதான அன்பே பவுலை உரோமைப் பேரரசு முழுவதும் நற்செய்தியை அறிவிக்க வைத்தது. எனவே இப்பணியானது அன்பின் பணியாகும்.

உலகின் பல பாகங்களில் நற்செய்தி அறிவிப்பது உடனடித் தேவையாக இருக்கும் வேளை குருக்கள் மற்றும் துறவிகளின் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. எனவே அன்புச் சகோதர சகோதரிகளே, இந்தப் பரந்த உலகெனும் கடலில் பயணத்தைத் தொடங்குவோம். இயேசுவின் அழைப்பைப் பின்பற்றி அவரின் தொடர்ந்த உதவியில் நம்பிக்கை வைத்து அச்சமின்றி வலைகளை வீசுவோம்.

அன்புச் சகோதர ஆயர்களே, நற்செய்தி அறிவிப்பதில் புனித பவுலின் எடுத்துக்காட்டைப் பின்பற்றுங்கள். ஓர் ஆயர் தனது மறைமாவட்டத்திற்காக மட்டுமல்ல, அகில உலகின் மீட்புக்காகவும் அருள்பொழிவு செய்யப்பட்டுள்ளார். இன்னும் இயேசுவை அறியாமலும் அவரது மீட்பளிக்கும் அன்பை அனுபவிக்காமலும் இருப்போருக்கு மறைப்பணியாற்றுவதற்கு ஆயர்கள் அழைக்கப்பட்டுள்ளார்கள்.

ஆயர்களுக்கு முதல் உடன் உழைப்பாளர்களாக இருக்கும் அன்பு குருக்களே, தாராள மனதுள்ள போதகர்களாகவும் ஆர்வமுள்ள நற்செய்தி அறிவிப்பாளர்களாகவும் இருங்கள்.

இருபால் துறவிகளே, நற்செய்தியை ஒவ்வொருவருக்கும் எடுத்துச் செல்லுங்கள்.

உலக மறைபரப்பு ஞாயிறைச் சிறப்பிக்கும் இவ்வேளையில் திருச்சபையின் நற்செய்தி அறிவிப்புப் பணிக்கு உதவும் பாப்பிறை மறைப்பணி கழகங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். இதற்கு ஆதரவு தரும் அனைவருக்கும் குறிப்பாக இளையோருக்கு நன்றி சொல்கிறேன். இந்நாளில் பங்குகளில் எடுக்கப்படும் உண்டியல் திருச்சபைகள் மத்தியிலான ஒன்றிப்பு மற்றும் கரிசனையின் அடையாளமாக இருக்கின்றது. நற்செய்தி அறிவிப்புப் பணி நன்கு செயல்பட செபிப்போம். இதற்கு அன்னைமரியின் உதவியை நாடுவோம் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் தமது செய்தியை முடித்துள்ளார்.








All the contents on this site are copyrighted ©.