2008-10-16 18:54:09

உலக ஆயர்கள் மாமன்றச் செய்தித் தொகுப்பு.16அக்டோபர் .


உரோமையில் நடந்து வரும் உலக ஆயர்கள் மாமன்றத்தில் 15 அக்டோபர் புதன்கிழமை மாலை 4.30 மணிக்கு ஆயர்கள் ஒன்று கூடினார்கள் .இது 17 ஆவது பொது அமர்வாகும் . பிரேசில் நாட்டின் தலைநகர் சாம் பவுலோவின் பேராயர் கர்தினால் ஒடிலோ பேத்ரோ ஷெரர் தலைமை தாங்கினார் . இதுவரை பொது அமர்வுகளில் 229 மாமன்ற ஆயர்கள் பேசியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது . கருத்துப் பரிமாற்றங்களின் தொகுப்புரையை புதன் மாலை அமர்வின் போது கனடா நாட்டின் கியூபெக் நகரப் பேராயர் கர்தினால் மார்க் கொல்லத் சபையில் வாசித்தார் . அவரது உரையின் முதல் பகுதியில் கடவுள் நம்மோடு பேசுகிறார் என்ற தலைப்பில் திருவெளிப்பாடு , உலகத்தின் படைப்பு , மீட்பின் வரலாறு பற்றியும் விளக்கப்பட்டது . முதல் பகுதியின் 2 ஆவது கருத்தாக கிறிஸ்துவைப் பற்றியும் தூய ஆவியானவரைப் பற்றியும் திருச்சபையைப் பற்றியும் விளக்கப்பட்டது . மூன்றாவது கருத்தாக இறைவார்த்தை பற்றியும் வழிபாடு பற்றியும் இறைவாக்கைச் செவி மடுத்தல் பற்றியும் விளக்கப்பட்டது.

திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் திருப்பாடல் 18 பற்றி முன்னர் கொடுத்த கருத்துரை ஆராயப்பட்டது . அதில் அவர் இறைவாக்கு உறுதியானது, நிலையானது , நிஜமானது , அனைத்திற்கும் அடித்தளம் அது எனக் கூறியிருந்தார். மூவொரு கடவுள் பற்றிய மறையுண்மையில் இறைவார்த்தையைக் காணலாம் . இறைவார்த்தை மனிதருக்குத் தரப்பட்டு மனிதனை மீட்பின் முழுமைக்குக் கூட்டிச் செல்கிறது . கிறிஸ்துவின் பிறப்பு , இறப்பு , உயிர்ப்பு வழியாகக் கிடைக்கும் மீட்பின் வரலாறு தூய ஆவியாரின் கொடையாகும் என்று புதன் மாலைக்கருத்தரங்கில் தெளிவான தொகுப்புரையை விளக்கமாக வழங்கினார் கியூபெக்கின் பேராயர் கர்தினால் மார்க் கொல்லத் . மேலும் இறைவார்த்தை பற்றியும் , இறைவார்த்தையும் – நற்செய்தி அறிவித்தல் பற்றியும் , வழி மரபுச் செய்தி பற்றியும் , கலந்து உரையாடல் பற்றியும் ஆராயப்பட்ட கருத்துக்களின் தொகுப்புரை மாமன்றத்தில் வழங்கப்பட்டது .








All the contents on this site are copyrighted ©.