2008-10-15 13:54:39

திருவிவிலியத்தின் நூல்கள் 2454 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன – திருச்சபை அதிகாரி


அக்.15,2008. உலகில் மிக அதிகமாக வாசிக்கப்படும் புத்தகம் திருவிவிலியம் என்றும், இதன் நூல்கள் 2454 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன, மேலும் ஏறத்தாழ 4500 மொழிகளில் மொழி பெயர்க்கப்படவுள்ளன என்று கத்தோலிக்க விவிலிய கூட்டமைப்பின் தலைவர் ஆயர் வின்சென்சோ பாலியா கூறினார்.

புத்தகங்களின் புத்தகமாகிய திருவிவிலியத்தை வாசித்துப் புரிந்து கொள்வது பற்றி திருப்பீட பத்திரிகை அலுவலகத்தில் நடைபெற்ற நிருபர் கூட்டத்தில் விளக்கிய ஆயர் பாலியா, விவிலியக் கழகங்கள் 2006 ஆம் ஆண்டில் இரண்டு கோடியே அறுபது இலட்சம் விவிலியங்களை விநியோகித்தன, ஆனால் அவை உலகின் இருநூறு கோடி கிறிஸ்தவரில் ஒன்று முதல் இரண்டு விழுக்காட்டினரையே சென்றடைந்தன என்றார்.

திருவிவிலியம் பற்றி உலக ஆயர்கள் மாமன்றம் நடைபெற்று வரும் இவ்வேளையில், விவிலியம் கிறிஸ்தவரின் வாழ்க்கையில் முக்கிய இடம் வகிக்கின்றது என்பதை பேரவைத் தந்தையரும் அறிந்துள்ளனர், இந்த மாமன்றத்திற்கான முன்வரைவு தொகுப்பும் இதனை உறுதி செய்துள்ளது என்றும், இத்தாலியின் தெர்னி ஆயருமான பாலியா தெரிவித்தார்.

மேலும், விவிலியப் பிரதிகளின் தேவையை உணர்ந்து விவிலியத்தை மொழி பெயர்த்து அதனை அச்சிட்டு இன்னும் அதிகமாக விநியோகிப்பதற்கென விவிலிய ஐக்கிய கழகங்களும் கத்தோலிக்க விவிலிய கூட்டமைப்பும் புதிய ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன.

இவ்வொப்பந்தத்தில் ஆயர் வின்சென்சோ பாலியாவும், விவிலிய ஐக்கிய கழகங்களின் பொதுச் செயலருமான பாஸ்டர் ஆர்ச்சிபால்டு மில்லெர் மில்லாயும் நேற்று கையெழுத்திட்டனர்.

கத்தோலிக்க விவிலிய வல்லுனர்களும், விவிலிய ஐக்கிய கழகங்களும் நாற்பது ஆண்டுகளாக இணைந்து பணி செய்கின்றன.

மேலும் இந்நிருபர் கூட்டத்தில் பேசிய திருப்பீட கிறிஸ்தவ ஒன்றிப்பு அவைத் தலைவர் கர்தினால் வால்ட்டர் காஸ்பர், விவிலியத்திற்கு விளக்கம் சொல்வதில் முன்பைவிட தற்சமயம் முக்கிய கிறிஸ்தவ சபைகள் ஒன்றிணைந்து செயல்படுகின்றன என்றார். உலகில் தற்சமயம் 34 ஆயிரம் கிறிஸ்தவ சபைகள் இருக்கின்றன. இவை ஆண்டுதோறும் அதிகமாகி வருகின்றன என்றும் கர்தினால் காஸ்பர் கூறினார்.

இன்னும், இந்நிருபர் கூட்டத்தில் பேசிய பாஸ்டர் மில்லாய், விவிலியத்தை மொழி பெயர்ப்பதில் கிறிஸ்தவ சபைகளுக்கிடையேயான ஒத்துழைப்பு குறித்த வழிகாட்டிகள் 1968ல் அமலுக்கு வந்ததிலிருந்து கத்தோலிக்க திருச்சபையும், விவிலிய ஐக்கிய கழகங்களும் சேர்ந்து 130 மொழி பெயர்ப்புகளை நடத்தியிருக்கின்றன என்றார். 2007 இல் சுமார் இரண்டு கோடியே அறுபது இலட்சம் விவிலியப் பிரதிகளையும் ஒரு கோடியே இருபது இலட்சம் புதிய ஏற்பாடு பிரதிகளையும் விநியோகித்தன என்றும் மில்லாய் கூறினார்.

விவிலிய ஐக்கிய கழகங்கள் அமைப்பு 145 தேசிய கழகங்களை உள்ளடக்கியுள்ளது.








All the contents on this site are copyrighted ©.