2008-10-14 15:51:42

ஈராக்கில் கிறிஸ்தவர்களது வாழ்க்கை கல்வாரி போன்றது – ஈராக் கர்தினால்


அக்.14,2008. ஈராக்கில் இறைவார்த்தையை வாழ்தல் என்பது வாழ்வை உயிர்த்தியாகம் செய்து சாட்சி பகருவதாகும் என்று அந்நாட்டு கல்தேய ரீதி கர்தினால் இம்மானுவேல் டெல்லி 12வது உலக ஆயர்கள் மாமன்றத்தில் கூறினார்.

திருத்தந்தையின் முன்னிலையில் சிட்னி பேராயர் கர்தினால் பெல்லினஅ தலைமையில் இன்று காலை தொடங்கிய பொது அமர்வில் உரையாற்றிய ஈராக் கர்தினால் டெல்லி, ஈராக்கில் கொல்லப்பட்ட ஆயர்கள் மற்றும் குருக்கள் பற்றி எடுத்துச் சொன்னார்.

16 குருக்களும் ஆயர்களும் கடத்தப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டது பற்றியும் குறிப்பிட்ட அவர், ஈராக்கில் கிறிஸ்தவர்களது வாழ்க்கை கல்வாரியாகவுள்ளது, மக்களுக்கு அமைதியும் பாதுகாப்பும் இல்லை, அன்றாட வாழ்க்கையின் அடிப்படை வசதிகள் இன்றி கஷ்டப்படுகிறார்கள் என்றும் தெரிவித்தார்.

241 பேரவைத் தந்தையர்கள் பங்கு கொண்ட இன்றைய காலை பொது அமர்வில் உரையாற்றிய புனிதர் நிலைக்கு உயர்த்தும் பணிகளைச் செய்யும் பேராயத் தலைவர் பேராயர் ஆஞ்சலோ அமாத்தோ, திருச்சபையின் இரண்டாயிரம் ஆண்டு வரலார்றில் கிழக்கிலும் மேற்கிலும் இயேசுவின் பள்ளியில் எண்ணற்றவர்கள் கற்றுள்ளார்கள் என்றார்.

அருட்சகோதரி அல்போன்சாவின் புனித வாழ்வு பற்றியும் எடுத்துச் சொன்ன பேராயர் அமாத்தோ, எண்ணற்ற பொதுநிலை விசுவாசிகள் அன்றாட வாழ்க்கையில் இயேசுவின் வார்த்தைகள் தங்களது உடலிலும் இரத்தத்திலும் ஒன்றரக் கலக்குமாறு வாழ்கிறார்கள் என்றார்.

திருச்சபையின் வாழ்விலும் பணியிலும் இறைவார்த்தை என்ற தலைப்பில் நடைபெறும் இந்த 12வது உலக ஆயர்கள் மாமன்றத்தில் இந்தியாவின் ஜாம்ஷெட்பூர் ஆயர் பெலிக்ஸ் டோப்போ உட்பட 20க்கும் மேற்பட்டோர் உரையாற்றினர்.










All the contents on this site are copyrighted ©.