2008-10-13 16:05:19

இறைவனுக்கான மனிதனின் ஏக்கங்கள் தவிர்க்கப்பட்டு மரணக் கலாச்சாரம் ஒன்று விதைக்கப்படுகிறது – கர்தினால் ஐவன் டயஸ்


13 அக்.,2008. பண்பாட்டுமயமாக்கல் என்பது அந்தந்தக் கலாச்சாரங்களில் நற்செய்தி அறிவிப்பதையும், அதற்கு மேலாக கலாச்சாரத்துக்குள்ளேயிருந்து அதனை நற்செய்தி மயமாக்குவதையும் குறித்து நிற்கின்றது என்று 12வது உலக ஆயர்கள் மாமன்றத்தில் கர்தினால் ஐவன் டயஸ் இன்று உரையாற்றினார்.

திருப்பீட விசுவாசக் கோட்பாட்டுப் பேராயத் தலைவர் கர்தினால் வில்லியம் ஜோசப் லெவேதாவின் தலைமையில் இன்று காலை தொடங்கிய இந்த ஆயர்கள் மாமன்றத்தின் பொது அமர்வில் 234 பேரவைத் தந்தையர்கள் பங்கு பெற்றனர். இதில் ஆயர்கள் மன்றப் பொதுச் செயலர் பேராயர் நிக்கோலா எத்தெரோவிச் முதலில் ஒர் அறிவிப்பு கொடுத்தார். இன்று மாலை பொது அமர்வு இடம் பெறாது என்றும் அதற்குப் பதிலாக பிறஇனத்தாரின் திருத்தூதரான புனித பவுல் கல்லறைக்கு பேரவைத் தந்தையர்கள் அனைவரும் திருப்பயணம் மேற்கொள்வார்கள் என்றும், இன்று மாலை 6 மணிக்கு புனித பவுல் ஆண்டை முன்னிட்டு பவுல் கல்லறை மீது கட்டப்பட்டுள்ள புனித பவுல் பசிலிக்காவில் நடத்தப்படும் இசைக் கச்சேரியில் திருத்தந்தை 16ம் பெனடிக்டிடன் பேரவைத் தந்தையர்களும் பங்கு பெறுவார்கள் என்றும் அறிவித்தார். அதன் பின்னர் இன்று உரையாற்றுவதற்கு குறிக்கப்பட்ட பேரவைத் தந்தையர்கள் தங்கள் கருத்துக்களை வழங்கினர்.

இன்று உரையாற்றிய திருப்பீட நற்செய்திபரப்புப் பேராயத் தலைவர் கர்தினால் ஐவன் டயஸ், கலாச்சாரத்திற்கு நற்செய்தி அறிவிப்பது, கலாச்சாரத்துக்குள்ளேயிருந்து நற்செய்தி அறிவிப்பது என்பது புதிய மறைப்பணித்தளங்களுக்கு மட்டுமல்ல, அன்று கிறிஸ்தவ நாடுகளாக இருந்து இன்றைய உலகில் இறைவனைவிட்டு வாழ விளைந்து பாராமுகமாய் இருக்கும் நாடுகளுக்கும் பொருந்தும் என்றார்.

இறைவனுக்கான மனிதநிந் ஏக்கங்கள் தவிர்க்கப்பட்டு மரணக் கலாச்சாரம் ஒன்று விதைக்கப்படுகிறது என்ற கர்தினால் ஐவன் டயஸ், இதனால் குடும்பமும் இளைய சமுதாயமும் பாதிக்கப்பட்டுள்ளன எனவும் கவலையை வெளியிட்டார்.



 








All the contents on this site are copyrighted ©.