2008-10-11 14:30:40

மறையுரைகளில் அரசியல் கூறுகளைத் தவிர்ப்பதற்கு அழைப்பு – பேரவைத் தந்தையர்கள்


அக்.11,2008. 12வது உலக ஆயர்கள் மாமன்றத்தின் நேற்று மாலை பொது அமர்வில் பேசிய புடாபெஸ்ட் கர்தினால் பீட்டர் எர்டோ, விசுவாசிகளுக்கு மறையுரைகள் ஆற்றும் போது அவர்களுக்குள் பிரிவினைகளை ஏற்படுத்தும் விவகாரங்களை விவேகமுடன் கையாளுமாறு கேட்டுக் கொண்ட அதேவளை அரசியல் கூறுகளைத் தவிர்ப்பதற்குப் பரிந்துரைத்தார்.

திருத்தந்தை 16ம் பெனடிக்டின் முன்னிலையில் 253 பேரவைத் தந்தையர்கள் பங்கெடுத்த காலை அமர்வில் பேசிய மியான்மாரின் யாங்கூன் பேராயர் சார்லஸ் மவுங் போ, புனித பேதுருவின் காலத்திலிருந்தே மியான்மாருக்குத் திருத்தந்தையர்கள் சென்றது கிடையாது என்று சொல்லி, திருத்தந்தை 16ம் பெனடிக்ட் மியான்மாருக்குத் திருப்பயணம் மேற்கொள்ளுமாறு அழைப்புவிடுத்தார்.

மியான்மாரில் நர்கீஸ் கடும் சூறாவளி ஏற்பட்டபோது 20 இலட்சத்துக்கு மேற்பட்டவர்கள் அகதிகளானார்கள், அச்சமயத்தில் கிறிஸ்தவ ஆலயங்கள் அகதிகள் முகாம்களாக செயல்பட்டன என்றும் யாங்கூன் பேராயர் சார்லஸ் தெரிவித்தார்.

இன்னும், இவ்வுலக ஆயர்கள் மாமன்றத்தில் பேசிய நைஜீரிய பேராயர் இக்னேஷியுஸ் காய்காமா, கத்தோலிக்கர்கள் விவிலியத்தை வாசிக்கத் தெரியாமல் இருந்தால்கூட ஒவ்வொருவரும் அதை வைத்திருப்பதற்கு ஊக்குவிக்கப்பட வேண்டும் என்றார்.

இதன் மூலம் அவர்கள் விவிலியத்தை அன்பு செய்து அதனைப் போற்ற முடியும் என்றுரைத்த அவர், குழந்தைகளுக்குத் திருமுழுக்கு அளிக்கும் போது பெர்றோர் விவிலியத்தைக் கொண்டு வந்து அது அக்குழந்தைகள் வாசிக்கும் பருவம் வரை அவர்கள் அருகில் அது வைக்கப்படுமாறு பரிந்துரைத்தார்.

வ்வமர்வில் பேசிய லாத்விய ஆயர் அன்டோன் ஜஸ்டஸ், விவிலியம் வைத்திருந்ததற்காகக் கொல்லப்பட்டவர்கள் பற்றி எடுத்துச் சொன்னார்.

திருச்சபையின் வாழ்விலும் பணியிலும் இறைவார்த்தை என்ற தலைப்பில் நடைபெறும் 12 வது உலக ஆயர்கள் மாமன்றம் இம்மாதம் 26ம் தேதி நிறைவு பெறும்.








All the contents on this site are copyrighted ©.