2008-10-11 14:29:37

நற்செய்தியை அறிவித்தல் என்பது அன்பை உலகமயமாக்குதலாகும் - பேரவைத் தந்தையர்கள்


அக்.11,2008 அடிப்படைவாதம், மதத்தீவிரவாதம், ஏழ்மை, அநீதி, நுகர்வுத்தன்மை, தான் என்ற போக்கு, வன்முறை, சாதிப்பாகுபாடு. பாலியல் பாகுபாடு, சமூகத்தொடர்பு சாதனங்ங்களின் ஆக்ரமிப்பு ஆகியவற்றுக்கிடையே சிக்கியுள்ள இன்றைய உலகி்ற்கு இறைவார்த்தையை எப்படி அறிவிக்கலாம் என்பதை ஒன்றிணைந்து சிந்திக்குமாறு பரிந்துரைத்தார் இந்தியாவின் கன்னூர் ஆயர் வர்க்கீஸ் சக்கலக்கல்.

இன்று காலை திருத்தந்தை 16ம் பெனடிக்டின் முன்னிலையில் தொடங்கிய 12 வது உலக ஆயர்கள் மாமன்றத்தின் பொது அமர்வில் பேசிய ஆயர் சக்கலக்கல், ஒருபக்கம் கடவுளுக்கான தாகத்திலும் மறுபக்கம் கடவுளற்ற சிந்தனையிலும் சென்று கொண்டிருக்கும் உலகில் இறைவார்த்தையை எப்படி வழங்குவது என்ற கேள்வியையும் எழுப்பினார்.

மரணக் கலாச்சாரத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் உலகில் நற்செய்தியை அறிவித்தல் என்பது அன்பை உலகமயமாக்குதலாகும் என்றும் கன்னூர் ஆயர் கூறினார்.

இன்னும் இவ்வமர்வில் பேசிய மலேசியாவின் குச்சிங் பேராயர் ஜான் ஹா தியோங் ஹாக், இறைவார்த்தையை அறிவிப்பதில் குருக்கள் முக்கிய பங்கு வகிப்பதால் குருத்துவ கல்லூரிகளில் இறைவார்த்தை ஆன்மீகத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுமாறு வலியுறுத்தினார்.

இதில் உரையாற்றிய பாப்புவா நியு கினி பேராயர் டக்லஸ் யங், இறைவார்த்தை அன்பு செய்யப்பட்டு அதேசமயம் அது பின்பற்றப்படாத இடங்களில், கிறிஸ்துவை மையமாகக் கொண்ட விவிலிய மேய்ப்புப்பணி திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்றார்.

இன்று காலை பொது அமர்வில் 32 பேரவைத் தந்தையர்கள் உரையாற்றினர். 220 பேரவைத் தந்தையர்கள் கலந்து கொண்டனர்.








All the contents on this site are copyrighted ©.