2008-10-11 14:28:22

திருச்சபைக்கு நான்கு புதிய புனிதர்கள்


அக்.11,2008. இந்தியாவில் கிறிஸ்தவர்கள் தங்களது விசுவாசத்திற்காக அடக்குமுறைகளை எதிர் நோக்கிவரும் இவ்வேளையில் அந்நாடு தனது முதல் பெண் புனிதரை நாளை பெறவிருக்கின்றது.

வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா சதுக்கத்தில் நாளை காலை திருத்தந்தை 16ம் பெனடிக்ட் நிகழ்த்தும் கூட்டுத் திருப்பலியில் கேரளாவின் அருளாளர் அருட்சகோதரி அல்போன்சா புனிதர் என அறிவிக்கப்படவுள்ளார்.

1910ம்ஆண்டு ஆகஸ்ட் 19ம்தேதி முத்தாதுபாடத்து என்ற ஒரு நல்ல குடும்பத்தில் கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் குடமலூரில் பிறந்த அன்னா, குழந்தையாக இருக்கும் போதே தாயை இழந்தார். சிற்றனையிடம் வளர்ந்த இவர், புனிதை குழந்தை தெரேசாவின் வழியைப் பின்பற்றி இயேசுவுக்குத் தன்னை முழுவதும் அர்ப்பணிக்க விரும்பி 1928 இல் ஏழைகளின் கிளாரா துறவு சபையில் சேர்ந்து அல்போன்சா என்ற பெயரை ஏற்றார். நோயினால் மிகவும் துன்புற்ற அருட்சகோதரி அல்போன்சா, தமது 36வது வயதில் 1946ம் ஆண்டு ஜூலை 28ம்தேதி இறைபதம் சேர்ந்தார்.

இன்னும் சுவிட்சர்லாந்து நாட்டு அருளாளர் அருட்சகோதரி மரிய பெர்னார்தா பட்லர், ஈக்குவதோர் நாட்டில் கிறிஸ்தவ சகாய அன்னையின் பிரான்சிஸ்கன் மறைபோதக சகோதரிகள் சபையை நிறுவியவர். மேலும் ஈக்குவதோர் நாட்டில் 1832 இல் பிறந்த அருளாளர் நர்ச்சிசா தெ ஹேசுஸ் மர்த்தில்லோ மோரன், நற்செய்திக்காகத் தன்னை அர்ப்பணித்தவர். இயேசுவின் பாடுகளின் மீது தாகம் கொண்டு முள்முடி அணிந்து கசையால் அடித்து கடும் தவ வாழ்வு மேற்கொண்டவர்.

இன்னும், 1791இல் இத்தாலியில் பிறந்த அருளாளர் அருட்திரு கயத்தானோ எரிக்கோ, இயேசுவின் திருஇருதய மறைபோதக சபையைத் தோற்றுவித்தவர்.இவர் தமது இறப்பு வரை அயராது இரவும் பகலும் ஒப்புரவு அருட்சாதனம் கேட்டவர்.

அருட்சகோதரி அல்போன்சா, இன்னும், இம்மூன்று அருளாளர்களையும் நாளை புனிதர்கள் என அறிவிக்கவுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

அருளாளர் அருட்சகோதரி அல்போன்சா புனிதர் என அறிவிக்கப்படவுள்ள திருப்பலியில் குருப்பன்தாராவின் 11 வயது ஜினில் ஷாஜியும் அவனது தந்தை ஷாஜியும் கலந்து கொள்கின்றனர். ஜினில், கோணலான கால்களுடன் பிறந்தவன். எனினும் அருட்சகோதரி அல்போன்சாவின் சமாதியில் செபித்ததன் பலனாக அவனின் கால்கள் குணமடைந்து நேராகின. இப்புதுமை 1999ஆம் ஆண்டில் நடைபெற்றது. இப்புதுமை, அருளாளர் அல்போன்சா புனிதர் நிலைக்கு உயர்த்தப்படுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

குடமலூரில் அல்போன்சாவின் வீடு அருங்காட்சியகமாக மாறியுள்ளது. அங்கு ஒரு சிற்றாலயமும் கட்டப்பட்டுள்ளது.

கேரள அரசு அல்போன்சாவின் சமாதி இருக்கும் பரணஞானத்திற்குச் செல்லும் சாலையை 3 கோடி ரூபாய் செலவில் புதுப்பித்துள்ளது.

திருத்தந்தை 16ம் பெனடிக்ட், அல்போன்சாவை புனிதர் என அறிவிக்கும் அந்நேரத்தில்

கேரளாவின் அனைத்து கத்தோலிக்க ஆலயங்களின் மணிகளும் ஒலிக்கப்படும். பரணஞானத்திலுள்ள அல்போன்சா ஆலயத்தில் ஞாயிறு முழுவதும் செபம் நடைபெறும். மேலும் நவம்பர் 9ம் தேதி பரணஞானத்தில் விழா நடைபெறும்.

 








All the contents on this site are copyrighted ©.