2008-10-10 14:38:31

ஒரிசாவில் கிறிஸ்தவ கிராமங்கள் எரிக்கப்பட்டுள்ளன, அகதிகள் முகாம்களைவிட்டு 12,000 பேர் காணாமற்போயுள்ளனர்


அக்.10,2008. ஒரிசாவில் இந்து தீவிரவாதிகளின் வன்முறைத் தாக்குதல்களால் அழிக்கப்பட்டுள்ள கிராமங்களை விட்டு வெளியேறியுள்ள கிறிஸ்தவர்க்கு அரசு அமைத்துக் கொடுத்த முகாம்களிலிருந்து 12 000 பேர் காணாமற்போயுள்ளனர் என்று ஆசிய செய்தி நிறுவனம் அறிவித்தது.

அதேசமயம் கிறிஸ்தவர்க்குப் பாதுகாப்பு வழங்குவதற்கு அரசு எல்லா வழிகளிலும் முயற்சிக்கும் என்ற உறுதிப்பாடு வழங்கப்பட்ட பின்னரும் 12க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ வீடுகள் எரிக்கப்பட்டுள்ளன என்றும் அச்செய்தி நிறுவனம் கூறியது.

ஒரிசாவில் கடந்த ஆகஸ்ட் 24ம் தேதியிலிருந்து இடம் பெற்று வரும் கிறிஸ்தவர்க்கு எதிரான தாக்குதல்களில் 60 பேர் இறந்துள்ளனர் மற்றும் 50 ஆயிரம் பேர் வெளியேற கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். அரசு முகாம்களில் குறைந்தது 15,000 பேருக்குப் புகலிடம் அளிக்கப்பட்டது.

இன்னும் வத்திக்கானில் நடைபெற்று வரும் 12 வது உலக ஆயர்கள் மாமன்றத்தில் உரையாற்றிய இந்திய ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் வர்கே விதயாத்தில், இந்தியாவில், குறிப்பாக ஒரிசாவில் இடம் பெற்று வரும் கிறிஸ்தவர்க்கு எதிரான தாக்குதல்கள் புதிய மறைசாட்சிகளை அளித்துள்ளன என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.