2008-10-10 14:37:28

அருட்சகோதரி அல்போன்சாவின் புனிதர் பட்ட விழாவில் கலந்து கொள்வதற்கென 13 பேர் அடங்கிய இந்திய அரசின் அதிகாரப்பூர்வ பிரதிநிதி குழு உரோம் வந்துள்ளது


அக்.10,2008. கேரள அருளாளர் அருட்சகோதரி அல்போன்சாவின் புனிதர் பட்ட விழாவில் கலந்து கொள்வதற்கென 12 பேர் அடங்கிய இந்திய அரசின் அதிகாரப்பூர்வ பிரதிநிதி குழு உரோம் வந்துள்ளது.

இந்திய தொழில் துறை அமைச்சர் ஆஸ்கார் பெர்னாண்டஸின் தலைமையில் கேரள பொதுப்பணித் துறை அமைச்சர் மோன்ஸ் ஜோசப், நாடாளுமன்ற உறுப்பினர் பி.சி.தாமஸ், கேரளாவின் முன்னாள் நிதி அமைச்சர் கே.எம்.மாணி, சட்டமன்ற உறுப்பினர்கள் பி.சி.ஜார்ஜ், கே.வி.தாமஸ், மெகாலயாவின் முன்னாள் ஆளுனர் எம்.எம். ஜேக்கப், மகாத்மா காந்தி பல்கலைக்கழக துணைவேந்தர் ஜான்சி ஜேம்ஸ் ஆகியோரை உள்ளடக்கிய குழு உரோம் வந்துள்ளது.

வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா சதுக்கத்தில் அக்.12, வருகிற ஞாயிறு காலை திருத்தந்தை 16ம் பெனடிக்ட் நிகழ்த்தும் கூட்டுத் திருப்பலியில் அருளாளர் அருட்சகோதரி அல்போன்சா புனிதர் என அறிவிக்கப்படுவார். இத்திருப்பலியில் அருளாளர் அல்போன்சாவின் புனிதப்பொருளை திருத்தந்தையிடம் எடுத்துச் செல்லும் மூவர் குழுவில் ஒருவராக திருவாளர் மாணி செல்வார். இவர், அருட்சகோதரி அல்போன்சாவின் கல்லறை இருக்குமிடமான பரணஞானம் உள்ளடங்கியுள்ள பாலை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் கேரள காங்கிரஸ் கட்சியின் தலைவரும் ஆவார்.

இந்நிகழ்வு பற்றிக் கூறிய மாணி, இது பெருமைப்பட வேண்டிய மற்றும் உணர்ச்சி மிகுந்ததாகவும் இருக்கின்றது என்றார். மேலும், இந்தியா முதன் முறையாக ஒரு புனிதரைக் கொண்டிருக்கின்றது, இந்தியாவிலே பிறந்து அங்கே வாழ்ந்து, அங்கே இறந்த முதல் புனிதையாக அருட்சகோதரி அல்போன்சா இருக்கின்றார் என்றும் அவர் கூறினார்.

இந்நிகழ்வில் ஏறத்தாழ பத்தாயிரம் இந்தியர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களில் பெரும்பாலானோர் ஐரோப்பா மற்றும் அமெரிக்க ஐக்கிய நாட்டிலிருந்து வரவுள்ளனர். கேரளாவிலிருந்து அனைத்து ஆயர்களும் கலந்து கொள்கின்றனர்.

கேரளாவின் குடமலூர் கிராமத்தில் பிறந்த அருட்சகோதரி அல்போன்சா, கிளாரிஸ்ட் துறவு சபையைச் சார்ந்தவர். இச்சகோதரி இறந்து நாற்பது ஆண்டுகள் கழித்து 1986ம் ஆண்டில் திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல் இவரை அருளாளர் என அறிவித்தார். இன்று இச்சபையின் ஏறத்தாழ ஏழாயிரம் அருட்சகோதரிகள் உலகின் பலநாடுகளில் பணி செய்கின்றனர்.

2003ஆம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதி அன்னை தெரேசா அருளாளர் நிலைக்கு உயர்த்தப்பட்ட போது இந்திய துணை குடியரசுத் தலைவர் பைரன்சிங் ஷேக்காவாட் தலைமையில் இந்திய அரசின் அதிகாரப்பூர்வ பிரதிநிதி குழு அந்நிகழ்வில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. 1556இல் மும்பைக்கு அருகில் வசையில் இந்திய தாய்க்கும் போர்த்துக்கீசிய தந்தைக்கும் பிறந்த கொன்சாலோ கார்சியா இந்தியாவின் முதல் புனிதராவார். இவர் ஜப்பானில் மறைசாட்சியானவர்.








All the contents on this site are copyrighted ©.