2008-10-08 14:01:46

அகதிகளை நம் சகோதரர்களாக நோக்க வேண்டும் - திருத்தந்தை




செப்.08,2008. நற்செய்தியை அச்சமின்றி ஆர்வத்துடன் களைப்பின்றி அறிவித்து அதற்குச் சான்று பகருமாறு கேட்டுக் கொண்டார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

நற்செய்தி முழுவதும் அன்பில் அடங்கியுள்ளது மற்றும் கிறிஸ்துவின் உண்மையான சீடர்கள் ஒருவர் மற்றவர் மீது கொண்டுள்ள அன்பினாலும் அனைவரையும் ஏற்பதாலும் அறியப்படுகிறார்கள் என்றும் கூறிய திருத்தந்தை, அகதிகளை நம் சகோதரர்களாக நோக்க வேண்டும் என்றார்.

95வது உலக இடம் பெயர்வோர் மற்றும் அகதிகள் தினத்திற்கென திருத்தந்தை 16ம் பெனடிக்ட் வெளியிட்டுள்ள செய்தியில் இவ்வாறு அவர் கூறியுள்ளார். இந்த 95வது உலக இடம் பெயர்வோர் மற்றும் அகதிகள் தினம், புனித பவுல், இடம் பெயர்பவர், மக்களின் திருத்தூதர் என்ற தலைப்பில் 2009ஆம் ஆண்டு ஜனவரி 18ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.

புனித பவுல் பிறந்ததன் இரண்டாயிரமாம் ஆண்டை முன்னிட்டு சிறப்பிக்கப்பட்டு வரும் இவ்வாண்டில் தனது அழைப்பினாலே இடம் பெயர்பவராக இருக்கும் பவுல், புலம் பெயர்வோர், இன்னும், அவர்கள் மத்தியில் பணி செய்வோர்க்கு முக்கியமான எடுத்துக்காட்டாய் இருக்கிறார் என்று திருத்தந்தை அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

சிலிசியாவின் தர்சு நகரத்தில் யூதக்குடியேற்றதாரர் குடும்பத்தில் பிறந்த சவுல் உரோமைக் கலாச்சார சூழலில் எபிரேய, கிரேக்கக் கலாச்சாரங்களையும் மொழிகளையும் கற்றவர். தமஸ்கு சாலையில் கிறிஸ்துவை சந்தித்த பின்னர், தனது சொந்த மரபுகளைப் புறக்கணியாமல், யூதமதம் சட்டம் ஆகியவற்றின் மீது நன்மதிப்பும் நன்றியும் கொண்டிருந்து, எவ்வித தயக்கமுமின்றி, இரண்டாம்தரச் சிந்தனைகளுக்கு இடம் கொடுக்காமல் ஆண்டவர் இட்ட புதிய பணிக்குத் தன்னை அர்ப்பணித்தவர் அவர். கிறிஸ்தவர்களைத் துன்புறுத்திக் கொண்டிருந்த நிலையிலிருந்து கிறிஸ்துவின் திருத்தூதர் என்ற நிலைக்கு மாறினார் என்றும் திருத்தந்தையின் செய்தி கூறுகின்றது.

பவுலின் வாழ்வும் போதனையும், முழுவதும் இயேசுவை அனைவருக்கும் தெரியப்படுத்துவதாக இருந்தது என்றுரைக்கும் அச்செய்தி, உலகமயமாக்கப்பட்ட இன்றைய காலத்திலும் திருமுழுக்குப் பெற்ற ஒவ்வொருவரின் மற்றும் திருச்சபையின் பணியும் இதுவே என்றும் கூறுகின்றது.

இன்றைய நவீன அடிமைத்தனத்தின் வடிவங்களான மனித வியாபாரம், அடிமைத்தனம் உள்ளிட்ட வீடுகளைவிட்டு வெகு தொலைவில் வாழும் மாணவர்கள், இடம் பெயர்ந்தோர், அகதிகள், புலம் பெயர்ந்தோர், வெளியேற்றப்பட்டோர் ஆகிய பலவகையான குடியேற்றதாரர்களுக்குத் திருச்சபையின் மேய்ப்புப்பணியும் இயேசுவை அறிவிப்பதாகவே இருக்க வேண்டும் என்றும் அச்செய்தி கூறுகின்றது.

ஒவ்வொரு கிறிஸ்தவ சமூகமும் புனித பவுலின் மறைப்பணி ஆர்வத்தைக் கொண்டிருக்குமாறும் திருத்தந்தை அழைப்புவிடுத்துள்ளார்.

மேலும், திருத்தந்தையின் இச்செய்தியை குடியேற்றதாரர் மற்றும் புலம் பெயர்வோருக்கான திருப்பீட மேய்ப்புப்பணி அவைத்தலைவர் கர்தினால் ரெனாத்தோ மர்த்தினோவும் அவ்வவைச் செயலர் பேராயர் அகுஸ்தீனோ மர்க்கெத்தோவும் இனறு நிருபர் கூட்டத்தில் வெளியிட்டனர்.








All the contents on this site are copyrighted ©.