2008-10-08 12:45:08

திருத்தந்தையின் புதன் பொது மறைபோதகம் . 081008 .


இன்றைய புதன் மறைபோதகம் தூய பேதுரு பசிலிக்கா வளாகத்தில் நடந்தது.

இதமான , இளஞ்சூடான காலை நேரம் .



இன்றும் கடந்த வாரத்தைப் போல, தூய பவுல் அடிகளார் பற்றி மறைபோதகம் வழங்கினார் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் . தூய பவுல் அடிகளாருக்கு வரலாற்று நாயகர் இயேசுவோடு இருந்த தொடர்பு பற்றி இன்று கூறினார் .



கொரிந்து நகர மக்களுக்கு எழுதிய மடலில் பவுல் எழுதியுள்ளார் – நாம் முன்னர் இயேசுவை உடலில் வாழ்ந்தவராகக் கண்டிருந்தாலும் இப்பொழுது நாம் அப்படிக் காண்பதில்லை . தூய பவுல் இங்கு இயேசுவை அவரது மனித வாழ்வில் பார்த்ததாகக் கூறவில்லை, ஆனால் மனிதக் கோணத்தில் பார்த்ததாகக் கூறுகிறார் . தொடக்க காலக் கிறிஸ்தவர்களின் மறைபோதகத்திலிருந்து பவுல் அடிகளார் கிறிஸ்துவைப் பற்றித் தெரிந்து கொண்டார் . அவர் தொடக்கத்தில் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ள மறுத்ததும் , டமாஸ்கஸ் செல்லும் வழியில் இயேசுக்கிறிஸ்துவால் தடுத்து ஆட்கொள்ளப்பட்ட பிறகும் , மகிமையிலிருந்த இயேசுவைப்பற்றி அவர் போதித்தவை தொடக்கக் காலக் கிறிஸ்தவர்களிடமிருந்து அவர் கேட்டுத் தெரிந்து கொண்டவையே . பவுல் அடிகளார் அவரது மடல்களில் கிறிஸ்துவின் உலக வாழ்க்கை பற்றியும் , இயேசுவின் போதனைகள் பற்றியும் குறிப்பிடுகின்றார் .இயேசுவின் போதனைகளிலிருந்து பவுல் அவருடைய மடல்களில் காணும் கிறிஸ்தவத்தின் மையக் கருப்பொருளைப் பெற்றுள்ளது தெளிவாகத் தெரிகிறது . இயேசு கடவுள் தந்தையின் திருமகன் என்பதும் , இயேசுவின் வழியாக நாம் மீட்பையும், இறைவனின் மக்கள் என்ற பேற்றையும் பெறுகிறோம் என்பதும் கிறிஸ்துவின் அனுபவத்திலிருந்தும் , போதனையிலுமிருந்தே அவர் பெற்றிருக்கிறார் என்பது தெளிவாகிறது . சுருக்கமாக , கிறிஸ்துவைப்பற்றி பவுல் அடிகளார் கொண்டிருந்த ஞானமும் , உயிர்த்த ஆண்டவர் இயேசுவை கடவுளின் திருமகன் என்றும் நம்முடைய மீட்பர் என்றும் தூய பவுல் அறிவித்ததும் இயேசுவின் வாழ்விலும் போதனையிலும் அடித்தளத்தைக் கொண்டுள்ளது .



வந்திருந்த அனைவருக்கும் வாழ்த்துக்கூறி , குறிப்பாக , வட அமெரிக்காவுக்கான திருப்பீடக் கல்லூரியிலிருந்து வந்திருந்த, குருப்பட்டம் பெற உள்ள தியாக்கோன்களுக்கும் , மலேசியாவிலிருந்து வந்திருந்த கிறிஸ்தவ இளைஞர்களுக்கும் சிறப்பான வாழ்த்துக்கூறி அவரது அப்போஸ்தலிக்க ஆசியை வழங்கினார் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் .








All the contents on this site are copyrighted ©.