மன இயல் நிபுணர்கள் கூறுகிறார்கள் .- சிறைகளில் துன்புறுவோர் , சாவுக்குக் காத்திருப்பவர்கள்
, பூஜ்யத்துக்கும் கீழே நடுக்கும் 40 டிகிரி குளிர் தாக்கும் சைபீரியச் சிறைக்குச் சென்றவர்கள்
, மற்றும் கம்யூனிசக் கொடூரங்கள் போன்ற துயரங்களைச் சந்திப்போர் அவர்களை வதைப்போர் பற்றி
கடும் வார்த்தைகளால் தாக்கிப் பேசுவது கிடையாது . கோடரி கொண்டு சந்தன மரங்களை மனிதன்
வெட்டிச் சாய்க்கும்போதும் அது நறுமணத்தையே கோடரிக்குக் கொடுக்கிறது. அதேபோலத்தான் சிறைகளில்
துன்புறுவோர் அவதூறு பேசுவது இல்லை . கம்யூனிசத்தை வெறுத்த அவர்கள் கம்யூனிசத்தை கொள்கையாகக்
கொண்டவர்களைப் பகைத்து வெறுத்ததில்லை .
ஆனால் நல்ல வாழ்க்கை நிலையில்
இருப்பவர்கள் அவர்களுக்கு எதிராக யாரும் பேசுவதை விரும்பமாட்டார்கள் . அவர்கள் உணர்ச்சி
வசப்பட்டு அவதூறு பேசியவர்களையும் அவர்கள் கொண்டிருக்கும் பொறுப்புக்களையும் தாக்கத்
தொடங்கிவிடுவார்கள் . கப்பல் தலைவனின் முகம் நன்றாக இல்லை என்பதற்காகக் கடலுக்குள்ளேயே
குதித்துவிட எண்ணுவார்கள் .
நாம் முதலில் பார்த்த சிறைவாசிகளுக்கும் வசதிகள்
இருந்தும் துன்புறுவோர்க்கும் இடையே இந்த வேறுபாடு ஏன் ? ஏனென்றால் முதல் வகை பிறர் மீது
இரக்கப்படுகிறார்கள் . அடுத்த வகையோ தங்கள் மேலேயே இரக்கம் கொள்கிறார்கள் . இயேசுக்கிறிஸ்துவை
கல்வாரி மலைக்கு அவர் அறையப்பட இருந்த கனமான சிலுவையைத் தூக்கிச் செல்லுமாறு கட்டளையிட்டிருந்தார்கள்.
அவர் அவ்வாறு செல்லும்போது எருசலேம் நகரத்துப் பெண்டிர் அவர் நிலைமையைப் பார்த்து அழுது
அரற்றினார்கள் . இயேசு அவர்களிடம், ‘எனக்காக நீங்கள் அழ வேண்டாம் . உங்களுக்காகவும் உங்கள்
குழந்தைகளுக்காகவும் அழுங்கள்’, என்றார் . அதாவது உங்கள் இரக்கம் எனக்கு வேண்டியதல்ல
. என்னை சாவுக்குக் கையளித்தவர்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள் .சிலுவையில் சாகின்றவருக்காக
அல்ல சிலுவையில் ஏற்றிக் கொல்பவர்களுக்காக அழுங்கள் . நான் சில மணித்துளிகள் துன்புறவுள்ளேன்
. பின்னர் நான் உயிர்தெழுவேன் . நெருப்பு கொழுந்துவிட்டு எரியும்போது அதன் நடுவில் அமைதியான
வெற்றிடமிருக்கும் என்றும் , சுழலும் சூறாவளிக் காற்றுக்குள்ளேயும் ஒரு அமைதி நிலவும்
எனவும் கூறுவார்கள் . அதே போல நான் முள் முடியால் சூட்டப்பட்டு துன்பத்தில் இருந்தாலும்
என் இதயத்தில் பாலைவனச் சோலைபோல மகிழ்ச்சி நிறைந்துள்ளது . அதை யாரும் என்னிடமிருந்து
எடுக்க முடியாது , என்கிறார் இயேசு . தன்னலத்தைப் பற்றியே எப்போதும் சிந்தித்துக் கொண்டிருக்கும்
ஒருவர் எப்பொழுதும் பிறர்மீது பழி சுமத்துவார் . குற்றத்தை யார் மீதாவது சுமத்த வேண்டும்
.
அது தனது பணி மேற்பார்வையாளரோ , நச்சரிக்கும் மனைவியோ , ஆசிரியரோ ,
அரசியல்வாதியோ , அடுத்தாற்போல் அமர்ந்திருக்கும் நமக்குப் பிடிக்காத ஒருவரோ பழியை ஏற்க
வேண்டும். நீதி,நீதி எனக் கேட்கும் மனித மனம் யார் தோள்மேலாவது பழியைப் போட விரும்புகிறது
. குற்றம் இழைத்தது தான் என்றாலும் குற்றமில்லாத அடுத்தவர் மீது பழியைச் சுமத்துகிறது
. இந்தத் தன்னிரக்கம் மனத்துயரை உண்டாக்கி விரக்திக்கும் மன உறுத்தலுக்கும் வழிவகுக்கிறது.
தங்கள் இறை நம்பிக்கைக்காக அநீதமான முறையில் துன்புறுகிறவர்கள் உள்ளத்தில்
கடவுள் மீது பக்தி எனும் காதல் கொண்டுள்ளார்கள். உடல் வருத்தம் காரணமாக மன வருத்தம் கொள்ளலாம்
. ஆனால் அங்கே மன உளைச்சல் இருக்காது . அவர்கள் தங்கள் பாவங்களுக்குப் பரிகாரமாகத் துன்பங்களை
ஏற்றுக் கொள்கிறார்கள் . இதை நாம் பேதுரு மற்றும் யூதாஸ் வாழ்வில் காண்கிறோம் . இரண்டுபேருக்குமிடையே
ஒரு குறிப்பிட்ட எல்லைவரை ஒற்றுமை இருப்பதைக் காண்கிறோம் . அவர்கள் இருவரையுமே ஆண்டவர்
இயேசு முன்னரே சோதனைகள் வரும் என்று எச்சரித்திருந்தார். அவர்கள் இருவரும் சாத்தான்களாக
மாறுவார்கள் என்றும் கூறியிருந்தார் .
இருவரும் இயேசுவை மறுதலித்தார்கள்
. அவர்கள் இருவருமே வருந்தினார்கள் . யூதாஸ் தன்னைப்பற்றியும் தன் தாழ்ந்துபோன நிலைபற்றியும்
எண்ணி வருந்தினான் . பேதுரு மனம் மாறிடத் திட்டமிட்டார் .மனத் தோட்டத்தில் முளைத்த களைகளைப்
பேதுரு நீக்கினார் . ஆனால் யூதாஸோ நெஞ்சில் ஓடிக்கொண்டருந்த நச்சுப் பாம்புகளைக் கொல்வதற்குப்
பதிலாக தன்னையே அழித்துக்கொண்டான் .
நம்மீது நாமே இரக்கப்பட்ட சமயங்களை
நாம் ஒரு தாளில் எழுதினால் அது நம்மைப்பற்றி மிகத் தெளிவாக நம் குணத்தை வெளிச்சம் போட்டுக்
காட்டும் . நம் குற்றங்களுக்காக நாம் பிறர் மீது பழி சுமத்திய இரகசியத்தையும் அது வெளிப்படுத்தும்
. நம் துன்பங்களுக்கு அடிப்படைக் காரணமே நாம்தாம் என்பது நமக்குப் புரியவரும் . என்மீது
நான் கொள்ளும் தன்னிரக்கம் காரணமாக எத்தனை பேர் என்னோடு சகித்துப் போகவேண்டியிருந்தது
. என்னுடைய சுய இரக்கம் பிறர் என்மீது அன்பு காட்டத்தடையாக இருந்த நேரங்களை எண்ணி நாம்
வருத்தப்பட வேண்டும் . இந்தத் தன்னிரக்கம் காரணமாக கடவுளின் அருள் பாய்ந்து வருவது தடை
செய்யப்பட்டிருக்கலாம் . என் மனக்குகையை தன் இரக்கம் எனும் கதவால் நான் மூடிவிட்டதால்
அங்கே வெளிச்சம் நுழைய வாய்ப்பில்லாது போய்விட்டது . லாசரே கல்லறையைவிட்டு வெளியே வா
என இயேசு அழைத்தால் , இல்லை , நான் எனது சுய இரக்கக் கல்லறையிலேயே இருந்து கொள்கிறேன்
எனக் கூறிவிடுகிறோம்.
தான் எனும் செருக்கும் சுய கெளரவச் சிந்தைகளுமே
நம் நிம்மதியைக் கெடுப்பன . கடவுள் இல்லை எனக் கூறுபவர்கள் தங்களையே கடவுளாகக் கருதிக்
கொள்கிறார்கள் . தன்னைச் சுற்றிலும் தடைச்சுவர்களும் பலவீனங்களும் விரக்தியும் சூழ்ந்திருக்கும்
போது காணாமல் போன ஆட்டைத்தேடிவரும் ஆயனாகிய ஆண்டவனை அவர்கள் வெறுக்கிறார்கள் . பேதுருவைப்
போல நம் குற்றங்களுக்காக வருந்தி ஆண்டவனிடம் மன்னிப்பு விழைவதே நிம்மதிக்கு வழி வகுக்கும்
. பாவம் செய்வதைவிட மிக மோசமானது ஒன்று உள்ளது . அது எது . நாம் பாவம் செய்வதே இல்லை
என்ற மனநிலையைக் கொண்டிருப்பதாகும். நாம் பாவம் செய்யாதவர்கள் என்றால் இயேசு என்ற மீட்பர்
உலகுக்குத் தேவை இல்லை .