2008-10-07 15:52:22

திருத்தந்தையும் பேரவைத் தந்தையரும் யூதமதவிரோதப் போக்குக்கு எதிராய்த் தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும் - இஸ்ரேல் ராபி


அக்.07,2008. திருத்தந்தை 16ம் பெனடிக்டும் பேரவைத் தந்தையரும் இஸ்ரேல் பற்றிய நல்லெண்ணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கவும் இஸ்ரேலுக்கு ஆதரவாகத் தொடர்ந்து பேசவும் யூதமதவிரோதப் போக்குக்கு எதிராய்த் தொடர்ந்து குரல் கொடுக்கவும் வேண்டுமென இஸ்ரேல் ராபி ஒருவர் கேட்டுள்ளார்.

வத்திக்கானில் நடைபெறும் விவிலியம் பற்றிய 12வது உலக ஆயர் மாமன்றத்தில் இத்திங்கள் மாலை பொது அமர்வில் உரையாற்றிய இஸ்ரேலின் ஹைப்பா முதனமைக்குரு ராபி ஷீர் யாஷிவ் கோஹென், தான் இதில் பங்கு கொள்வது நமது மற்றும் எதிர்காலத் தலைமுறைக்கு அன்பு, நல்லிணக்கம், அமைதி ஆகிய செய்தியின் அடையாளமாக இருக்கின்றது என்றார்.

கத்தோலிக்கத் திருச்சபைக்கும் யூதமதத்தினருக்கும் இடையே நீண்ட கால கடினமான மற்றும் வேதனையான வரலாறு இருந்துள்ளது என்று பேசிய அவர், தான் இப்பொழுது இங்கு நிற்பது மிகவும் அர்த்தம் நிறைந்ததாக இருக்கின்றது என்றார்.

இரண்டாம் உலகப் போரின் போது திருத்தந்தை பத்திநாதர் யூதர்களைக் காப்பாற்ற முன்வரவில்லை, எனவே அவர் முத்திப் பேறு பெற்ற நிலைக்கு உயர்த்தப்படக்கூடாது, யாரையும் புண்படுத்துவதற்காக இதனைச் சொல்லவில்லை என்றும் பேரவைத் தந்தையரிடம் கூறினார் ராபி கோஹென்.

உலக ஆயர் மாமன்றத்தில் ஒரு யூதமத ராபி பேரவைத் தந்தையருக்கு உரையாற்றியிருப்பது இதுவே முதன்முறையாகும்.








All the contents on this site are copyrighted ©.