2008-10-07 15:55:00

ஒரிசாவில் இடம் பெறும் வன்முறை நிறுத்தப்படுவதற்கு ஐரோப்பிய ஆயர்கள் அழைப்பு


அக்.07,2008. இந்தியாவில் கிறிஸ்தவர்க்கெதிராக தொடர்ந்து இடம் பெறும் வன்முறைகளை கண்டித்துள்ள அதேவேளை, அவ்வன்முறைகள் நிறுத்தப்படுவதற்கு ஐரோப்பிய நாடுகள் தங்களால் இயன்ற அனைத்து வழிகளிலும் ஈடுபடுமாறு அந்நாடுகளின் ஆயர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

36 ஐரோப்பிய ஆயர்கள் பேரவைகளின் தலைவர்கள் அண்மையில் ஹங்கேரி நாட்டின் எஸ்டர்கோமில் நடத்திய கூட்டத்தின் முடிவில் வெளியிட்ட அறிக்கையில், ஒரிசாவில் கிறிஸ்தவர்க்கெதிராக தொடர்ந்து இடம் பெற்று வரும் செய்திகள் தங்களுக்கு கவலை தருவதாகத் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் வன்முறைகளால் பாதிக்கப்பட்டுள்ள கிறிஸ்தவர்கள் மற்றும் அவர்களின் மேய்ப்பர்களுடனான தங்கள் ஒருமைப்பாட்டுணர்வையும் தெரிவித்துள்ள ஐரோப்பிய திருச்சபை தலைவர்கள், ஐரோப்பிய அரசுகளும் நிறுவனங்களும் வன்முறைகள் நிறுத்தப்படுவதற்கு தங்களால் இயன்ற அனைத்து வழிகளிலும் ஈடுபடுமாறு வலியுறுத்தியுள்ளனர்.

இக்கூட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய ஐரோப்பிய ஆயர்கள் பேரவைகளின் கூட்டமைப்பின் தலைவரான எஸ்டர்கோம்-புடாபெஸ்ட் கர்தினால் பீட்டர் எர்தோ, இந்தியாவிலும், இன்னும் பாகிஸ்தான், ஈராக், வியட்னாம் உள்ளிட்ட பல நாடுகளிலும் கிறிஸ்தவர்கள் தாக்கப்படுவதற்குத் தனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்தார்.

மேலும், ஒரிசாவில் தொடர்ந்து தாக்கப்பட்டு வரும் கிறிஸ்தவர்களுக்குப் பாதுகாப்பு வழங்குமாறு இந்திய அரசைக் கேட்டுள்ளது ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் என்ற சர்வதேச மனித உரிமைகள் கழகம்.

இன்னும் காந்தமால் மாவட்டத்தில் ஆறு வாரங்களாகத் தொடர்ந்து இடம் பெற்று வரும் இவ்வன்முறை தொடர்பாக மேலும் 40 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்கள் கூறுகின்றன.

இவ்வன்முறைகளில் 4000த்துக்கு மேற்பட்ட கிறிஸ்தவ வீடுகள் எரிக்கப்பட்டுள்ளன, ஏறதச்தாழ 100 ஆலயங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன, அநேக குருக்களும் பாஸ்டர்களும் அடிக்கப்பட்டுள்ளனர் மற்றும் ஓர் அருட்சகோதரி கற்பழிக்கப்பட்டுள்ளார்.








All the contents on this site are copyrighted ©.