2008-10-07 15:53:31

ஐ.நா.பொது அவை மக்கள் மத்தியில் மேலும் ஒத்துழைப்பும் நல்லிணக்கமும் ஏற்பட உழைப்பதற்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.


அக்.07,2008. உலக நாடுகள், சர்வதேச மனித உரிமைகள் சாசனத்தைக் கடைபிடித்தால் தற்போது உலகை வருத்தும் சண்டைகள் ஒழிந்து அனைவரும் மனித உரிமைகளை அனுபவிப்பதற்கு அரசியல் ரீதியாக உதவ முடியும் என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் ஐ.நா.பொது அவையில் கூறினார்.

சர்வதேச மனித உரிமைகள் சாசனம் அறிவிக்கப்பட்டதன் 60ஆம் ஆண்டு இவ்வாண்டு நினைவுகூரப்படுவதைச் சுட்டிக் காட்டிய பேராயர் செலஸ்தினோ மிலியோரே, வாழ்வதற்கும், எண்ணங்களுக்குமான உரிமை, மனசாட்சி மற்றும் சமய சுதந்திரத்திற்கான உரிமை ஆகியவை அரசியல் சார்பான விவகாரங்களில் எப்பொழுதும் புறக்கணிக்கப்படுகின்றன என்றார்.

ஐ.நா. நிறுவனத்தின் பணி பற்றிய ஐ.நா. பொதுச் செயலரின் அறிக்கை குறித்த பொது அமர்வில் உரையாற்றிய ஐ.நா.வுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளரான பேராயர் மிலியோரே, ஓராண்டுக்கு முன்னர் ஐ.நா.பொது அவை நிறைவேற்றிய பூர்வீக இன மக்களுக்கான உரிமைகள் காப்பாற்றப்படுவதில் அரசுகளுக்கும் அவ்வின மக்களுக்குமிடையே புரிந்து கொள்ளுதல் வளர்க்கப்படுமாறும் கேட்டுக் கொண்டார்.

வளர்ச்சிக்கான நிதி சேமிப்பு பற்றி தோகாவில் நடைபெறவுள்ள சர்வதேச கூட்டமானது, வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பை புதுப்பிக்கும் என்ற தனது நம்பிக்கையையும் குறிப்பிட்டார் பேராயர் மிலியோரே.








All the contents on this site are copyrighted ©.