2008-10-06 14:55:07

அக்டோபர் 07 செபமாலை அன்னை திருவிழா


துருக்கியரின் ஆக்ரமிப்பை எதிர்த்து 1571ஆம் ஆண்டு அக்டோபர் 07ம் தேதி ஐரோப்பியர்கள் நடத்திய மாபெரும் லேபந்தோ கடற்படை சண்டையில் கிடைத்த வெற்றியில் கிறிஸ்தவ கலாச்சாரம் காப்பாற்றப்பட்டது. செபமாலை பக்தியின் மூலம் இவ்வெற்றி கிடைத்ததால் திருத்தந்தை 5ம் பத்திநாதர் இந்நாளில் வெற்றியின் அன்னை என்ற விழாவை ஏற்படுத்தினார். இவ்வெற்றி அடிப்படையில் செபமாலை செபித்ததால் கிடைத்ததால் இவருக்குப் பின் வந்த திருத்தந்தையர்கள் இந்நாளை செபமாலை அன்னை திருவிழாவாக மாற்றினர். 13ம் நூற்றாண்டில் போதகர்கள் சபையை நிறுவிய புனித டொமினிக்குக்கு அன்னைமரியா காட்சி கொடுத்ததோடு செபமாலை பக்தி ஆரம்பமானது. பின்னர் இச்சபையினர் செபமாலை பக்தியைப் பரப்பினர். 1520ல் திருத்தந்தை 10ம் சிங்கராயர் அக்டோபர் மாதத்தை செபமாலை அன்னைக்கு அர்ப்பணிக்கப்பட்ட மாதமாக அறிவித்தார். மேலும் 1716ல் இளவரசர் யூஜின், ஹங்கேரியில் அதே துருக்கியரை செபமாலை பக்தியின் பயனாகத் தோற்கடித்தார். அதற்குப் பின்னர் இவ்விழா உலகெங்கும் சிறப்பிக்கப்படுகிறது. செபமாலையை ரோசரி என்று ஆங்கிலத்தில் சொல்கிறோம். ரொசாரியும் என்ற இலத்தீன் சொல்லிலிருந்து வருவது ரோசரி என்னும் பதமாகும். ரொசாரியும் என்பதற்கு ரோஸ் தோட்டம், ரோஸ் மலர் கொத்துக்கள், பூமாலை, நல்ல சிந்தனைகளின் தொகுப்புகள் என்று அர்த்தமாகும்.

சிந்தனைக்கு - இருட்டு விலகாமல் போகட்டும். உன் விரல்கள் வெளிச்சம் ஏற்றுவதை நிறுத்தக்கூடாது.








All the contents on this site are copyrighted ©.