2008-10-05 14:17:19

12வது உலக ஆயர்களின் மாமன்றம் சிறப்பாக நடைபெற அனைவரும் செபிக்குமாறு திருத்தந்தை அழைப்பு


அக்.05,2008. ஞாயிறு திருப்பலி முடிந்து வத்திக்கான் வந்து புனித பேதுரு சதுக்கத்தில் நின்று கொண்டிருந்த சுமார் இருபதாயிரம் விசுவாசிகளுக்கு மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை, 12வது உலக ஆயர்களின் மாமன்றம் பற்றிச் சொன்னார்.

RealAudioMP3

உலக ஆயர்கள் மாமன்றம், உலக ஆயர் பேரவைகளின் பிரதிநிதிகளைக் கொண்ட ஆயர்களின் பேரவையாகும். இது பேதுருவின் வழிவருபவர்க்கு உதவவும் அதேசமயம் திருச்சபை ஐக்கியத்தை வெளிப்படுத்தி, அதை உறுதிப்படுத்தவும் கூட்டப்படுகிறது. இது ஒரு முக்கியமான அமைப்பாகும். இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கத்தின் கடைசி கட்டத்தில் ஆயர்களின் திருப்பணி பற்றிய கொள்கைத் தொகுப்பில் திருத்தந்தை ஆறாம் பவுல் 1965ஆம் ஆண்டு செப்டம்பரில் இது நடத்தப்படுவதற்கான ஆணையை வெளியிட்டார். திருத்தந்தைக்கும் உலகின் ஆயர்களுக்கும் இடையேயான ஒன்றிப்பையும் ஒத்துழைப்பையும் மேம்படுத்தவும் திருச்சபையின் உண்மையான நிலை, அது எதிர் கொள்ளும் பிரச்சனைகள் பற்றிய நேரிடையான மற்றும் சரியான தகவல்களை வழங்கவும், திருச்சபை கோட்பாடுகள் மற்றும் மேய்ப்புப்பணி நடவடிக்கைகல் பற்றிய உடன்பாட்டை ஊக்குவிக்கவும் முக்கியமான மற்றும் காலத்திற்கேற்ற தலைப்புகள் பற்றிப் பேசவும் இது கூட்டப்படுகின்றது. சினோடோஸ் என்ற கிரேக்கச் சொல்லுக்கு வழி, சாலை என்று பொருள். எனவே இம்மாமன்றம் ஒன்று சேர்ந்து வழிகளை ஆய்வு செய்கின்றது. இன்று தொடங்கியுள்ள இந்த மாமன்றமத்திற்கான தலைப்பாக திருச்சபையின் வாழ்விலும் பணியிலும் இறைவார்த்தை என்பதைத் தேர்ந்தெடுத்துள்ளேன். பலரிடம் கலந்தாலோசித்த பின்னர் இதைத் தேர்ந்தெடுத்தேன். இதில் 253 பேரவைத் தந்தையர்கள் கலந்து கொள்கின்றனர். இவர்களில் 51 பேர் ஆப்ரிக்காவிலிருந்தும், 62 பேர் அமெரிக்காவிலிருந்தும், 41 பேர் ஆசியாவிலிருந்தும், 90 பேர் ஐரோப்பாவிலிருந்தும், 9 பேர் ஓசியானியாவிலிருந்தும் உள்ளனர். இன்னும் பல ஆண் பெண் வல்லுனர்கள், பார்வையாளர்கள், பிற கிறிஸ்தவ சபைகள், பிற கிறிஸ்தவ சமூகங்களின் பிரதிநிதிகளும் சிறப்பாக அழைக்கப்பட்ட சிலரும் இதில் கலந்து கொள்கின்றனர். இம்மாமன்றம் நன்முறையில் நடைபெற அனைவரும் செபிக்குமாறும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். பின்னர் அனைவருக்கும் தமது அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

. RealAudioMP3








All the contents on this site are copyrighted ©.