2008-10-04 12:25:28

விவிலியம் குறித்த 12வது உலக ஆயர் பேரவை ஆரம்பம்- புனித பவுல் பசிலிக்காவில் திருத்தந்தை திருப்பலி


அக்.04,2008. திருச்சபையின் வாழ்விலும் பணியிலும் இறைவார்த்தை என்ற தலைப்பில் நடைபெறவுள்ள 12வது உலக ஆயர் பேரவையை நாளை, உரோம் புனித பவுல் பசிலிக்காவில் திருப்பலி நிகழ்த்தி தொடங்கி வைக்கவுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

இந்த 12வது உலக ஆயர் பேரவை பற்றி நிருபர் கூட்டத்தில் விளக்கிய அவ்வாயர் பேரவையின் பொதுச் செயலர் பேராயர் நிக்கோலா எத்தெரோவிச், வழக்கமாக உலக ஆயர் பேரவை வத்திக்கான் பேதுரு பசிலிக்காவில் தொடங்கும், எனினும் புனித பவுல் ஆண்டை முன்னிட்டு இப்பேரவை, புனித பவுல் பசிலிக்காவில் ஆரம்பிக்கவிருக்கின்றது என்றார்.

இவ்வுலக ஆயர் பேரவையில் சீன கம்யூனிச நாடு தவிர உலகின் பிற பகுதிகளிலிருந்து 253 பேரவைத் தந்தையர்கள் கலந்து கொள்கின்றனர், இவர்கள் 113 ஆயர் பேரவைகள், 13 கீழைரீதி திருச்சபை பேரவைகள், உரோம் தலைமையகத்தின் 25 துறைகள், துறவு சபைகளின் அதிபர்கள் அவை ஆகியவற்றின் பிரதிநிதிகளாவர். இவர்களில் 51 பேர் ஆப்ரிக்காவிலிருந்தும், 62 பேர் அமெரிக்காவிலிருந்தும், 41 பேர் ஆசியாவிலிருந்தும், 90 பேர் ஐரோப்பாவிலிருந்தும், 9 பேர் ஓசியானியாவிலிருந்தும் உள்ளனர். மேலும் இவர்களில் 173 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், 38 பேர் பதவியினிமித்தம் பங்கு கொள்பவர்கள், 32 பேர் திருத்தந்தையால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மற்றும் 19 பேர் இன்னும், 10 பேர் துறவு சபைகளின் அதிபர்கள் அவையினால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.

மேலும், 21 நாடுகளிலிருந்து 6 பெண் வல்லுனர்கள் உட்பட 41 வல்லுனர்களும், 26 நாடுகளிலிருந்து 19 பெண் பார்வையாளர்கள் உட்பட 37 பார்வையாளர்களும் கலந்து கொள்கின்றனர்.

இஸ்ரேலின் ஹைப்பா முதனமைக்குரு ராபி ஷீர் யாஷிவ் கோஹென், ஐக்கிய விவிலிய கழகத்தின் பொதுச் செயலர் பாஸ்டர் எ.மில்லெர் மில்லோய், பிரான்சிலுள்ள டேஜே குழுவின் தலைவர் அருட்சகோதரர் அலாய் ஆகிய மூவரும் திருத்தந்தையின் சிறப்பு விருந்தினர்களாக இப்பேரவையில் பங்கெடுக்கின்றனர். யூதர்கள் புனித மறை நூலை வாசித்து அதற்கு விளக்கம் கொடுக்கும் முறை பற்றி ராபி ஷீர் யாஷிவ் கோஹென் அக்.6 இத்திங்களன்று உலக ஆயர் பேரவையில் உரையாற்றுவார். ஒரு யூதமத ராபியும், கிறிஸ்தவரல்லாதவரும் பேரவைத் தந்தையருக்கு உரையாற்றவிருப்பது இதுவே முதன்முறையாகும்.

கிறிஸ்தவ ஒன்றிப்பு சபை பிதாப்பிதா, மாஸ்கோ செர்பியா, ரொமானியா பிதாப்பிதாக்கள், கிரேக்க ஆர்த்தோடாக்ஸ் சபை, அர்மேனிய அப்போஸ்தலிக்க சபை, ஆங்கிலிக்கன் சபை, உலக லூத்தரன் கூட்டமைப்பு, கிறிஸ்தவின் சீடர் சபை உலக கிறிஸ்தவ சபைகளின் மன்றம் என பத்து பிற கிறிஸ்தவ சபைகள் மற்றும் திருச்சபை சமூகங்களின் முக்கிய பிரதிநிதிகளும் இதில் கலந்து கொள்கின்றனர்.

அக்டோபர் 5ம் தேதி தொடங்கும் விவிலியம் குறித்த இந்த 12வது உலக ஆயர் பேரவை

அக்டோபர் 26ம் தேதி வத்திக்கான் பேதுரு பசிலிக்காவில் நடைபெறும் திருப்பலியுடன் நிறைவு பெறும்.








All the contents on this site are copyrighted ©.