2008-10-04 12:24:35

திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இத்தாலிய அரசுத் தலைவர் சந்திப்பு


அக்.04,2008. அனைவருக்கும் நன்மை செய்து அனைவரையும் குணப்படுத்திய இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளையும் எடுத்துக்காட்டையும் பின்பற்றி திருச்சபை எப்பொழுதும் மனிதனுக்குத தொண்டு செய்வதைத் தனது நோக்கமாகக் கொண்டுள்ளது என்று கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

இத்தாலிய அரசுத் தலைவர் ஜார்ஜோ நாப்போலித்தானோவை, அரசுத் தலைவர் மாளிகையில் இன்று சந்தித்த திருத்தந்தை, திருச்சபை அதிகாரத்தையோ, சமூக பொருளாதார ஆதாயங்களையோ சார்ந்து இல்லை என்றும் கூறினார்.

திருச்சபை மனிதனுக்கான பணியைச் செய்வதற்கு அதற்கு சமய சுதந்திரம் எப்பொழுதும் அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.

ஐ.நா.மனித உரிமைகள் சாசனம் பிரகடனப்படுத்தப்பட்டதன் 60 ஆம் ஆண்டு இவ்வாண்டில் நினைவுகூரப்படுவதைச் சுட்டிக் காட்டிய திருத்தந்தை, இன்றைய புதிய தலைமுறைகள் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றியும் பேசினார்.

கிறிஸ்தவ மனிதாபிமான கல்வி பற்றியும் குறிப்பிட்டு இளையோரை உருவாக்குவதில் திருச்சபை, குடும்பம் மற்றும் பள்ளியுடன் இணைந்து பணி செய்கின்றது என்றார்.

திருத்தந்தையர்கள் இந்த இத்தாலிய அரசுத் தலைவர் மாளிகையில் ஏறத்தாழ 200 ஆணடுகள் வாழ்ந்து திருச்சபையை வழிநடத்தியது பற்றியும் கூறிய அவர், 1929ல் லாத்தரன் ஒப்பந்தத்தைக் கையெழுத்திட்டுப் பேசிய திருத்தந்தை 11ம் பத்திநாதர் புனித பிரான்சிஸ் அசிசிக்கு அர்ப்பணித்தையும் குறிப்பிட்டார்.

திருத்தந்தை 13ம் கிரகரி, பாப்பிறையின் கோடை விடுமுறை இல்லமாக 1573ல் இந்த அரசுத் தலைவர் மாளிகையைக் கட்டினார். இது 1870ம் ஆண்டுவரை பாப்பிறைகளின் இல்லமாகவும் நிர்வாக இடமாகவும் இருந்தது.








All the contents on this site are copyrighted ©.