2008-10-01 19:31:12

திருத்தந்தையின் புதன் பொது மறைபோதகம் .01,அக்டோபர், 08.


இன்றைய மறைபோதகம் தூய பேதுரு பசிலிக்கா வளாகத்தில் நடந்தது . வந்தவர்களை வாஞ்சையோடு வரவேற்றார் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் .இன்று தூய பவுல் அடிகளாரைப்பற்றி மறைபோதகம் வழங்கினார் திருத்தந்தை . 12 திருத்தூதர்களோடு தூய பவுல் அடிகளாரின் உறவு பற்றிக் கூறினார் திருத்தந்தை . 12 திருத்தூதர்களுக்கும் உரிய மரியாதை கொடுத்து நற்செய்திப் பணி பற்றி மனம் திறந்து பேசினார் தூய பவுல் அடிகளார் . மோசேயின் சட்டங்களைப் புற இனத்தவர் கடைப்பிடிக்கத் தேவையில்லை என பவுல் அடிகளார் திருத்தூதர் சபையில் கூறினார் . வறியோர்க்கு தொண்டுபுரிவது நற்செய்திப் பணியோடு இணைந்த ஒன்று என்பதை எல்லோரும் ஏற்றுக்கொண்டார்கள் . தூய பவுல் அடிகளார் புற இனத்தவரிடமிருந்து காணிக்கை பெறுவதைத் திருத்தூதர்கள் ஏற்றுக்கொண்டார்கள் . அன்புள்ளம் கொண்டு இயங்கும் திருச்சபையில் கிறிஸ்தவர்களின் விடுதலை பற்றி திருத்தூதர்கள் உறுதி செய்தனர் . அந்தியோக்கியா நகரில் யூதர்களுக்கு இடறலாக இருக்கக்கூடாது என்பதற்காக திருத்தூதர் பேதுரு புற இனத்தாரோடு உண்ண மறுத்தது கிறிஸ்து தந்துள்ள விடுதலைப்பண்புக்கு ஏற்புடையதல்ல என திருத்தூதர் பவுல் தூய பேதுருவைக் கடிந்து கொண்டார் . இருப்பினும் பல ஆண்டுகளுக்குப் பின்னர் உரோமையருக்கு எழுதிய திருமடலில் நம்முடைய விடுதலைப் பண்பு பிறருக்குத் துர்மாதிரியாக இருக்கக்கூடாது எனத் திருத்தூதர் பவுல் கூறியுள்ளார் . திருத்தூதர் பவுலின் எடுத்துக்காட்டு திருச்சபையில் ஆவியானவரால் வழிநடத்தப்பட்டு நாம் விடுதலை உணர்வோடு வாழ அழைக்கிறது . அவ்விடுதலை பிறரன்புச் சேவையில் அதன் உச்ச நிலையை வெளிப்படுத்துகிறது என மறைபோதகம் வழங்கி அனைவருக்கும் தமது அப்போஸ்தலிக்க ஆசியை வழங்கினார் நம் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் .



 







All the contents on this site are copyrighted ©.