2008-09-30 15:39:16

ஒவ்வொருவருக்கும் தனது நம்பிக்கை பற்றி பேச உரிமை இருப்பது போல் கிறிஸ்தவர்க்கு நற்செய்தி அறிவிக்க உரிமை இருக்கிறது – மும்பை துணை ஆயர்


செப்.30,2008. ஒவ்வொருவருக்கும் தனது நம்பிக்கை பற்றியும் தனது மதத்தைப் பற்றியும் பேச உரிமை இருப்பது போல் கிறிஸ்தவர்க்கு நற்செய்தி அறிவிக்க உரிமை இருக்கிறது என்று மும்பை துணை ஆயர் அக்னெல்லோ கிராசியாஸ் கூறினார்.

இந்தியாவில் ஒரிசாவிலும் பிற மாநிலங்களிலும் கிறிஸ்தவர்கள் தாக்கப்படுவதற்கு இந்து தீவிரவாத அமைப்புகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் பற்றிக் கூறிய போது இவ்வாறு அவர் கூறினார்.

யாரும் பிறக்கும் போதே கிறிஸ்தவராக, இந்துவாக, முஸ்லீமாகப் பிறப்பதில்லை, யாருடைய இரத்தமும் அவர் குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்தவர் என்று சுட்டிக்காட்டுவதில்லை, ஆனால் ஒருவர் பிறக்கும் போது ஒரு குறிப்பிட்ட மதத்தில் பிறக்கின்றார் என்றார்.

இந்துமதம் யாரையும் மதமாற்றவில்லை, தனது மறைப்பணி போதகர்களை அனுப்பவில்லை என்று தற்போது சொல்லப்பட்டு வருவது உண்மையல்ல எனறுரைத்த ஆயர் அக்னெல்லோ, இந்தியாவிலும் மேற்கிலும் இந்து மறைப்போதகர்கள் அதிகம் உள்ளனர், இவர்கள் இந்தியாவிலுள்ள கிறிஸ்தவ மறைப்போதகர்களைவிட அதிகம் என்றும் தெரிவித்தார்.

ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் இந்துக் கோவில்கள் அதிகம் இருக்கின்றன, தொடர்ந்து கட்டப்பட்டும் வருகின்றன என்றும் ஆசிய செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் மும்பை துணை ஆயர் அக்னெல்லோ கிராசியாஸ் கூறினார்.

 








All the contents on this site are copyrighted ©.