2008-09-29 15:45:32

செப்டம்பர் 30 – புனித ஜெரோம்


முன்னாள் யூகோஸ்லாவியாவில் பிறந்த புனித ஜெரோம் இலத்தீன், கிரேக்கம், எபிரேயம், கல்தேயம் ஆகிய மொழிகளில் தேர்ச்சி பெற்றவர். உரோமையில் கல்வி கற்ற இவர், அறிவுத் தாகம் கொண்டு பல இடங்கள் சென்றார். தனது 39ம் வயதில், 380 ஆம் ஆண்டில் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார். பின்னர் உரோம் சென்று திருத்தந்தைக்குச் செயலராக 5 ஆண்டுகள் பணியாற்றினார். அச்சமயம் விவிலியத்தைப் புதுப்பித்து எழுதினார். ஒரு நூலகத்தைத் திறந்தார். பக்தியுள்ள பெண்கள் குழு ஒன்று விவிலியம் கற்பதற்கும் உதவினார். திருத்தந்தை தமாசுஸ் இறந்த பின்னர் ஜெரோமை உரோமையை விட்டு வெளியேற்றினர். இப்பக்தியுள்ள பெண்களும் அவருடன் பெத்லகேம் சென்றனர். அங்கு ஒரு துறவு மடத்தையும் பள்ளியையும் நிர்வகித்தார். அதோடு விவிலியத்தைச் சிறப்பான முறையில் மொழி பெயர்த்த பெரும் பணியையும் செய்து முடித்தார். 18 ஆண்டுகள் கடுமையாய் உழைத்து 404ம் ஆண்டில் அவர் வெளிக்கொணர்ந்த வுல்காத்தா மொழி பெயர்ப்பு, திருச்சபையின் அதிகாரப்பூர்வ விவிலியம் என்று மாபெரும் திரிதெந்தின் பொதுச் சங்கம் அறிவித்தது. இவர் எளிதில் எரிச்சல்படக்கூடியவராம். எனினும் உடனே தனது தவற்றை உணர்ந்து வருந்துவாராம். தனது குறைகளை நினைத்து கல்லால் நெஞ்சில் அடித்துக் கொள்வாராம். நூலகத்தில் பணியாற்றுவோருக்குப் பாதுகாவலரான புனித ஜெரோம், 420ம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி இறந்தார். மறைநூலை அறியாதிருப்பது கிறிஸ்துவையே அறியாதிருப்பதாகும் என்று சொன்னவர் புனித ஜெரோம்.








All the contents on this site are copyrighted ©.