2008-09-29 15:37:26

ஏழை நாடுகளின் வளர்ச்சிக்கென அதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாதது ஏன் – திருப்பீடப் பேச்சாளர்


செப்.29,2008. வளர்ந்த நாடுகளின் பொருளாதார நெருக்கடிகளுக்குத் தீர்வு காண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் இந்நாட்களில் ஏழை நாடுகளின் வளர்ச்சிக்கென அதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாதது ஏன் என்ற கேள்வியை திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருட்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி எழுப்பியுள்ளார்.

அமெரிக்க ஐக்கிய நாட்டின் அண்மை பொருளாதார நெருக்கடிகளுக்குத் தீர்வு காண அரசு எழுபதாயிரம் கோடி டாலரை ஒதுக்க முன்வந்திருப்பது குறித்து கருத்து வெளியிட்ட அவர், உலக நாடுகள் அனைத்தும் இணைந்து ஏழ்மை அகற்றலுக்கு வழங்கும் தொகையைவிட இது மிகப் பெரிது என்றார்.

இன்றைய வளர்ந்த நாடுகளின் பொருளாதார நெருக்கடிகள் தீர்க்கப்பட வேண்டும் என்பது முக்கியமே, அதேவேளை ஏழை நாடுகளின் பொருளாதார மேம்பாட்டிற்கும முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என்று திருப்பீடப் பேச்சாளர் வலியுறுத்தினார்.

இன்றைய உலகில் இராணுவச் செலவுகளுக்கும் பணக்காரர்களின் அத்தியாவசியமற்ற தேவைகளுக்கும் பயன்படுத்தப்படும் பணம் உலகில் ஏழ்மையை அகற்றுவதற்கென ஒதுக்கப்படும் தொகையைவிட மிக அதிகம் எனவும் அருட்தந்தை லொம்பார்தி கூறினார்.








All the contents on this site are copyrighted ©.