2008-09-24 13:47:50

அரசுகள் சிறுபான்மை சமயத்தவருக்குப் பாதுகாப்பு அளிக்க வத்திக்கான் அதிகாரி வலியுறுத்தல்


செப்.24,2008. அரசுகள் சமய சகிப்புத்தன்மையை ஊக்குவிக்க வேண்டும் மற்றும் சிறுபான்மை மதத்தவரைக் குறிவைத்துத் தாக்கும் சமய அவதூறு சட்டங்களைத் தவிர்க்க வேண்டும் என்று வத்திக்கான் அதிகாரி ஒருவர் வலியுறுத்தினார்.

ஐ.நா.மனித உரிமைகள் அவை நடத்தும் கூட்டத்தில் உரையாற்றிய ஜெனீவாவிலுள்ள ஐ.நா. அலுவலகங்களுக்கானத் திருப்பீட பிரதிநிதி பேராயர் சில்வானோ தொமாசி, சில நாடுகளில் சமய அவதூறு சட்டங்கள் தனிப்பட்ட எதிரிகளை அழிப்பதற்கான ஆயுதங்களாக அல்லது கூட்டான வன்முறையைத் தூண்டுவதற்கான சாக்குப்போக்காகப் பயன்படுத்தப்படுகின்றன என்றார்.

இனவெறி, நிறப்பாகுபாடு, அந்நியர்மீதான வெறுப்பு மற்றும் சகிப்பற்றதன்மை பற்றிய ஐ.நா கூட்டத்தில் பேசிய அவர், சமய சகிப்பற்றதன்மை அதிகமாகி வருவதன் வெளிப்பாட்டை உலகின் பல பாகங்களில் அண்மை வாரங்களில் காண முடிகின்றது என்றார்.

இந்தியா, பாகிஸ்தான், ஈராக் ஆகிய நாடுகளில் கிறிஸ்தவர்க்கெதிராக நடைபெறும் வன்முறைகள் மற்றும் அடக்குமுறைகளைக் குறிப்பிட்ட பேராயர் தொமாசி, இத்தகைய குற்றங்களைச் செய்வோர் தண்டனை பெறாமலிருப்பது மற்ற மதத்ததவர் இவ்வன்முறைகளைச் செய்யலாம் என்பதை உறுதிபடுத்துவதாய் இருக்கின்றது என்றார்.

 








All the contents on this site are copyrighted ©.