2008-09-23 14:49:36

இலங்கையில் அமைதி ஏற்பட வேண்டும் என்று மன்னார் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் பல்சமயப் பிராரத்தனை


செப்.23,2008. இலங்கையில் அமைதி ஏற்பட வேண்டும், குறிப்பாக வன்னிப்பிரதேசத்தில் போர்ச்சூழலில் சிக்கித்தவிக்கும் மக்களின் துயர் நீங்குவதற்கு அமைதி ஏற்பட வேண்டும் என்று வலியுறுத்தி மன்னார் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் அமைதிப் பேரணியும் பல்சமயப் பிரார்த்தனையும் நடத்தப்பட்டன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை உலக அமைதி தினம் ஐ.நா.வால் கடைபிடிக்கப்பட்டதை முன்னிட்டு யாழ்ப்பாண மறைமாவட்ட நீதி மற்றும் அமைதி ஆணையம், மானிப்பாய் அந்தோனியார் ஆலயத்தில் நடத்திய இப்பல்சமயச் செபத்தில் பெரும் திரளான மக்கள் கலந்து கொண்டார்கள்.

மேலும், இப்பல்சமயச் செபத்தில் உரையாற்றிய மன்னார் ஆயர் ஜோசப் இராயப்பு, போதுமான குடியிருப்பு வசதிகள், உணவு, மற்ற எந்த உதவியுமின்றி ஏறத்தாழ ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் மக்கள் அப்பகுதியில் கஷ்டப்படுகிறார்கள் என்றார்.

இலங்கை இராணுவமும் தமிழ் விடுதலைப் புலிகளும் அண்மையில் நடத்திய கடும் தாக்குதலில் குழந்தைகள் உட்பட அப்பாவி மக்கள் பலியானதையும் ஆயர் ஜோசப் குறிப்பிட்டார்.

இப்பல்சமயச் செபக் கூட்டத்தில், துன்புறும் குடும்பங்களுக்கென இருபது இலட்சத்துக்கு மேற்பட்ட ரூபாய்களை மக்கள் கொடுத்தனர்.

இன்னும், போர் சூழ்நிலை காரணமாக நாட்டின் வட பகுதியில் மீன்பிடித் தொழில் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளது என்று கூறுகிறார் யாழ்ப்பாண பல்கலைக்கழகப் பேராசிரியர் சிலுவைதாசன்.

இலங்கையின் மொத்த உற்பத்தியில் 36 சதவீதத்தைப் பெற்றிருந்த வடபகுதி தற்போது வெறும் பத்து சதவீதத்தையே பெற்றுள்ளது, மீன்பிடித் தொழிலில் முதலிடத்தில் இருந்து, தற்போது கடை நிலைக்கு இலங்கையின் வடக்கு மாகாணம் கீழிறங்கியுள்ளது என்றும் அவர் விவரித்தார்.








All the contents on this site are copyrighted ©.