2008-09-22 14:54:55

கடும் ஏழ்மையை அகற்றுவதற்கு உலகத் தலைவர்கள் நடவடிக்கை எடுக்க திருத்தந்தை அழைப்பு




 செப்.22, 2008. உலகில் இடம்பெறும் கடும் ஏழ்மையை அகற்றுவதற்கு உலகத் தலைவர்கள் நடவடிக்கை எடுக்குமாறு இம்மூவேளை செப உரையின் இறுதியில் கேட்டுக் கொண்டார் திருத்தந்தை.

பல நாடுகள், பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்ளும் வேளை உலகின் கடும் ஏழ்மையை அகற்றுவதற்கு மிகுந்தத் தியாகங்கள் செய்ய வேண்டியருந்தாலும் ஏழ்மையை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார் அவர்.

இரண்டாயிரமாம் ஆண்டு செப்டம்பர் எட்டாம் தேதி உருவாக்கப்பட்ட மில்லேனேய வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்படுவது பற்றி வருகிற வியாழனன்று ஐ.நா.பொது அவையின் 63வது கூட்டத்தில் உயர்மட்ட கூட்டம் நடைபெறவிருப்பது குறித்தும் சுட்டிக் காட்டினார் அவர்.

நலிந்தோரை அதிகம் பாதிக்கும் பசி, வறுமை, கல்விவாய்ப்பின்மை ஆகியவற்றைக் களைய இம்முக்கியமான கூட்டத்தில், உலகத் தலைவர்கள் ஆவன செய்யவும் கேட்டுக் கொண்டார்.

மேலும் ஏற்றுக் கொள்ளவும் மன்னிக்கவும் கடினமாக இருப்போரோடு ஒப்புரவு அடைவதற்குத் திருப்பலி நமது இதயங்களுக்குத் திறவு கோலாக இருக்கின்றது என்றும்

திருத்தந்தை கூறினார்.

காஸ்தெல் கண்டோல்போவிலுள்ள பாப்பிறை கோடை விடுமுறை இல்லத்துக்கு அருகிலுள்ள அல்பானோ பேராலயப் பீடத்தை ஞாயிறன்று மந்திரித்து திருப்பலி நிகழ்த்தி மறையுரையாற்றிய திருத்தந்தை, ஒருவருக்கொருவர் அந்நியமாய் இருந்து திருப்பலி பீடத்திற்கு வரும் போது ஒப்புரவாக வேண்டியதன் தேவையைச் சுட்டிக் காட்டினார்.








All the contents on this site are copyrighted ©.