2008-09-22 14:46:09

ஆண்டவருக்காக வேலை செய்வதற்கு இயலுவதே விலைமதிப்பிட முடியாத வெகுமதி - திருத்தந்தை


செப்.22, 2008. பணத்துக்காக மட்டும் வேலை செய்தால் புதையலை இழந்து விடுவோம், மாறாக, ஆண்டவருக்காக வேலை செய்வதற்கு இயலுவதே விலைமதிப்பிட முடியாத வெகுமதியாக இருக்கின்றது என்று திருத்தந்தை கூறினார்.

திராட்சைத் தோட்ட வேலையாட்கள் உவமை பற்றி ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையில் விளக்கிய திருத்தந்தை, இவ்வுவமையில் வேலையாட்களுக்குக் கொடுக்கப்பட்ட ஊதியம் எவ்வாறு நித்திய வாழ்வைக் குறிக்கின்றது என்பது பற்றியும் இவ்வாழ்வெனும் கொடையானது கடவுள் ஒவ்வொருவருக்குமென வைத்திருப்பது என்றும் கூறினார்.

உண்மையில் கடைசியானோராகக் கருதப்பட்டவர்கள், அவர்கள் அதை ஏற்றுக் கொண்டால் முதன்மையானோராகவும், அதேவேளை முதன்மையானோர் கடைசியானோராகவும் மாறக்கூடிய ஆபத்தை எதிர்நோக்குகிறார்கள் என்றும் அவர் கூறினார்.

இவ்வுவமையில் திராட்சைத் தோட்ட உரிமையாளர் முதலில் வேலையில்லா நிலையை சகித்துக் கொண்டதாகத் தெரியவில்லை, அவரது தோட்டத்தில் எல்லாரும் வேலை செய்ய வேண்டுமென்று விரும்பினார், எனவே வேலை செய்ய அழைக்கப்படுவதே ஒரு வெகுமதிதான் என்றார் திருத்தந்தை.

ஆண்டவரின் திராட்சைத் தோட்டத்தில், அவரது பணிக்கு நம்மைக் கையளித்து அவரது திட்டங்களோடு ஒத்துழைத்து வேலை செய்ய இயலுமானால் அதுவே விலைமதிப்பிட முடியாத வெகுமதியாக இருக்கின்றது, எல்லா வேலைக்கும் சன்மானமும் கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.

ஆண்டவரையும் அவரது அரசையும் அன்பு செய்பவருக்கே இச்செய்தி புரியும் என்றும் கூறிய அவர், பணத்துக்காக மட்டும் வேலை செய்தால் இவ்விலைமதிப்பற்ற புதையலை ஒருபொழுதும் அறிய மாட்டார்கள் என்றும் தெரிவித்தார்.

இந்த நற்செய்திப் பகுதியை எழுதிய புனித மத்தேயுவே இப்புதையலை முதலில் அனுபவித்தவர் என்று கூறி மத்தேயு இயேசுவால் அழைக்கப்பட்ட விதம் பற்றியும் விளக்கினார் திருத்தந்தை.

தான் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாளில் ஆண்டவரின் திராட்சைத் தோட்டத்தில் வேலை செய்யும் பணியாளராகத் தன்னை அறிமுகப்படுத்தியதையும் திருத்தந்தை சுட்டிக் காட்டினார்.








All the contents on this site are copyrighted ©.