2008-09-17 19:03:39

திருத்தந்தையின் புதன் மறைபோதகம் .170908 .


இப்புதன் மறைபோதகம் முந்நாள் பாப்பிறை 6 ஆம் பவுல் அரங்கத்தில் நடந்தது . வந்தவர்களை வாஞ்சையோடு வரவேற்ற திருத்தந்தை இன்றைய மறைபோதகம் பிரான்ஸ் நாட்டுத் திருப்பயணம் பற்றிச் சிந்திக்க நல்லதொரு வாய்ப்பு எனக்கூறினார் .பிரான்ஸ் நாட்டுத் தலைநகர் பாரிசில் உலகச் சான்றோர்களுக்கு உரை வழங்கும் வாய்ப்புக் கிடைத்தது . ஐரோப்பிய நாடுகளின் பண்பாட்டுக்கு துறவு மடங்கள் நல்ல அடித்தளமிட்டதாகக் கூறியதாகத் திருத்தந்தை தெரிவித்தார் .திருநூலைத் தியானிப்பது இறை வார்த்தைக்கு நம் மனங்களையும் இதயங்களையும் திறந்துவிடுவதாகவும் மனித உரு எடுத்த வார்த்தையாகிய கடவுள் இறைவனின் படைக்கும் சக்திக்கு ஆதாரம் என்று அடிக்கோடிட்டுக் காட்ட விரும்பியதாகவும் திருத்தந்தை தெரிவித்தார் . பாரிசின் பிரம்மாண்டமான நோட்டர்டாம் என்னும் மேரி மாதாவின் பேராலயத்தில் ஆயர்கள் குருக்கள் துறவியர் குருமாணவர்கள் ஆகியோருக்கு உரை வழங்கி, தூய ஆவியானவரும் திருச்சிலுவையும் கொண்டிருக்கும் புதையல் பற்றிக் கூறியதாதக் தெரிவித்தார் பாப்பிறை 16 ஆம் பெனடிக்ட் . லூர்து நகரில் அமல அன்னை சிறுமி பெர்னதெத்துக்குக் காட்சிகள் கொடுத்த 150 ஆவது ஆண்டுக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள அங்குச் சென்று மசபியேல் கெபிக்கு அருகில் நிகழ்த்திய திருப்பலியில் இறையருளால் திருச்சிலுவையின் மகிமை விழாவைக் கொண்டாடியதாகத் திருத்தந்தை கூறினார் . இயேசுவின் இறப்பையும் உயிர்ப்பின் மகிமையையும் எந்நாளும் நினைவுபடுத்தும் அடையாளச் சின்னம் சிலுவை எனத் திருத்தந்தை கூறினார் . கடவுள் உலகின்மீது எவ்வளவு அன்பு கொண்டாரென்றால் தம் மகனையே உலகின் மீட்புக்காகத் தானமாக அளித்தார் . துன்பங்கள் இல்லாது உண்மை அன்பு இல்லை என்றும் அன்பின் கொடைகள் துன்பமில்லாது வருவதில்லை என்றும் திருத்தந்தை கூறினார் . லூர்து நகரம் இறைப்பற்றுக்கும் நம்பிக்கைக்கும் பள்ளிக்கூடம் , ஏனென்றால் அது பிறரன்புக்கும் சேவைக்கும் ஒரு பள்ளிக்கூடம் எனக்கூறினார் திருத்தந்தை . அவரது பிரான்சு நாட்டுத் திருப்பயணம் அருள்மிக்க மறக்கமுடியாத பயணமாக அமைந்ததற்குக் காரணமான அனைவருக்கும் நன்றி கூறி வந்திருந்த அனைவருக்கும் அவரது அப்போஸ்தலிக்க ஆசியை வழங்கினார் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட்.








All the contents on this site are copyrighted ©.