2008-09-16 14:50:00

ஜிம்பாபுவேயில் குணப்படுத்தலுக்கும் ஒப்புரவுக்கும் ஆயர்கள் அழைப்பு


செப்.16, 2008. ஜிம்பாபுவேயில் அதிபர் இராபர்ட் முகாபேயும் எதிர்கட்சித் தலைவரான மார்கன் சாங்கிராயும் அதிகாரப் பகிர்வுக்கான ஒர் உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ள வேளை, நாட்டில் ஒப்புரவும் குணப்படுத்தலும் தேவைப்படுகின்றன என்று அந்நாட்டு ஆயர் பேரவையின் பொதுச் செயலர் அருட்திரு ப்ரெட்ரிக் கிரோம்பா கூறினார்.

தென்னாப்பிரிக்க அதிபர் முன்னிலையில் தலைநகர் ஹராரேயில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலந்து கொண்ட அருட்திரு ப்ரெட்ரிக், இப்புதிய அரசியல் அமைப்பு, உணவு நெருக்கடியைக் களைவது உள்ளிட்ட பல சவால்களைச் சந்திக்க வேண்டியுள்ளது என்றார்.

அறுவடை ஏமாற்றியுள்ளது, மருத்துமனைகளில் மருந்துகள் இல்லை, ஆஸ்பிரின்கூட இல்லாமல் மருத்துவர்கள் கஷ்டப்படுகிறார்கள், அண்டை நாடுகளில் ஏறத்தாழ முப்பது இலட்சம் ஜிம்பாபுவே மக்கள் வாழ்கிறார்கள், பொருளாதார நிலையும் மந்தமாக உள்ளது என்றும் அக்குரு கூறினார்.

தற்சமயம் 1,10,000 பேருக்கு அவசர உணவு உதவி தேவைப்படுகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.

ஆப்ரிக்க நாடான ஜிம்பாபுவேயில் அதிபர் இராபர்ட் முகாபேயும் எதிர்கட்சித் தலைவரான மார்கன் சாங்கிராயும் கையெழுத்திட்டுள்ள அதிகாரப் பகிர்வுக்கான இந்த உடன்பாட்டின் நோக்கம் அங்கு நிலவி வந்த அதிகார மற்றும் பொருளாதார நெருக்கடிகளை முடிவுக்கு கொண்டு வருவதேயாகும். இந்த உடன்பாட்டின் மூலம் நாட்டின் அதிபராக முகாபேயும் பிரதமராக சாங்கிராயும் தொடருவார்கள்.

நாட்டில் நிலவி வரும் மிகக் கடுமையான உணவுத் தட்டுப்பாட்டை சமாளிக்கவும் வெளிநாட்டு உதவிகள் நாட்டுக்குள் வரும் வகையில் செய்வதுமே தமது முன்னுரிமைகளாக இருக்கும் என்று பிரதமராகும் சாங்கிராய் கூறியுள்ளார்.










All the contents on this site are copyrighted ©.