2008-09-15 16:28:38

விடுதலை, நீதி, அமைதி எனும் நற்செய்தியின் ஒளியை நாம் புறக்கணிக்கும் போது பகைமை, பழிவாங்கல், வன்முறை எனும் இருளை நாமே உருவாக்குகிறோம்


செப்.15,2008. பொலிவியாவில் அண்மையில் இடம் பெற்ற வன்முறைகளால் பாதிக்கப்பட்ட மக்களுடன் தன் ஒருமைப்பாட்டை அறிவிப்பதாகவும், இன்றைய சமுதாயத்தில் காணப்படும் விஷங்களான பகைமை, இனவெறி மற்றும் வன்முறைகள் களையப்பட வேண்டும் எனவும் அந்நாட்டு கர்தினால் ஹூலியோ தெராசாஸ் அழைப்பு விடுத்தார்.

பொலிவியாவில் இன்று இடம் பெறும் மோதல்களைப் பார்க்கும் போது தீமைகளைப் பலுகவிடாமல் நன்மைகளைக் கொணர வேண்டிய வழிகளின் அவசியம் உணரப்படுகின்றது என ஞாயிறு மறையுரையில் உரைத்த கர்தினால், தாழ்ச்சி எனும் பண்பு குறித்தும் எடுத்துரைத்தார்.

சிலுவையில் உயர்த்தப்பட்ட இயேசுவைப் பார்த்து மீட்பின் வழிகளைக் கண்டு கொள்ளும் போது பிறருடன் இணைந்து வாழ்வது நமக்கு இயலக் கூடியதாகிறது என்ற சாந்தா குரூஸ் பேராயர் கர்தினால் ஹூலியோ தெராசாஸ், விடுதலை, நீதி, அமைதி எனும் நற்செய்தியின் ஒளியை நாம் புறக்கணிக்கும் போது பகைமை, பழிவாங்கல், வன்முறை எனும் இருளை நாமே உருவாக்குகிறோம் என்றார்.

எவரையும் தீர்ப்பிடாமல் அன்பின் வாழ்வை ஏற்று நடத்தவே இயேசுவிடமிருந்து நாம் அழைப்பு பெறுகிறோம் என மேலும் அவர் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.