2008-09-13 09:19:55

பாரிசில் எலிசே மாளிகையில் அரசுத் தலைவர், அதிகாரிகளுக்கு திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட் ஆற்றிய உரை - கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் பிரான்ஸ் நாடு திருச்சபைக்கு ஆற்றியுள்ள பணிகளை மறக்க முடியாது


செப்.12, 2008. RealAudioMP3 பல வேளைகளில் பிரான்ஸ் நாடானது திருத்தந்தையின் செபங்களின் மையமாக இருந்துள்ளது என்பதை நீங்கள் அறிய வேண்டுமென விரும்புகிறேன். கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் பிரான்ஸ் நாடு திருச்சபைக்கு ஆற்றியுள்ள பணிகளை மறக்க முடியாது. பிரான்சின் தலைநகரம் பாரிஸ் எனக்குப் பரிச்சயமானதே. பல வேளைகளில் கல்வியினிமித்தமும் பல்வேறு காரணங்களுக்காகவும் இங்கு தங்கியுள்ளேன். இந்நாடு கிறிஸ்தவத்தின் துவக்க காலத்திலேயே நற்செய்தியைப் பெற்றுள்ளது. ஆரம்ப காலத்திலேயே கவுல் பகுதியில் கிறிஸ்தவ சமூகமும், லியோனில் ஆயரும் இருந்ததற்கான சாட்சிய எழுத்துக்கள் உள்ளன. இந்நாட்டின் ஆதிகாலத் திருச்சபை, உயரிய நாகரீகத்தை வழங்கியதில் சிறந்த பங்காற்றியுள்ளது. இந்நாட்டில் காணப்படும் ஆயிரக்கணக்கான கோவில்களும் துறவு இல்லங்களும் கிறிஸ்தவ முன்னோடிகளின் விசுவாசத்தைப் பறைசாற்றி நிற்கின்றன என்ற திருத்தந்தை, அரசுக்கும் திருச்சபைக்கும் இடையே நிலவும் உறவு குறித்தும் தன் எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார். பிரான்சில் இவ்விரு தரப்பினருக்குமிடையே இருந்த கடந்த காலச் சந்தேகங்கள் களையப்பட்டு நல்லுறவு பலம் பெற்று வருவது குறித்தும் சுட்டிக் காட்டினார்.



RealAudioMP3 மனிதர்களின் மனசாட்சியை உருவாக்குவதிலும் சமூகத்தின் ஒழுக்க ரீதி அடிப்படையை உருவாக்குவதிலும் திருச்சபைக்குச் சிறப்பு பங்கு உள்ளது. நிலையற்ற தன்மைகளை வழங்கி வரும் இன்றைய உலகின் இளைய சமுதாயம் குறித்து நான் அக்கறை கொண்டுள்ளேன். அவர்களுக்கு ஊக்கமும் பொறுப்புணர்வுக்கான தயாரிப்பில் உதவியும் தேவைப்படுகிறது. இன்றைய மேற்கத்திய நாடுகளில் ஏழை பணக்காரர் இடைவெளி அதிகரித்து வருகிறது. ஏழைகளின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டு மாண்புகள் மேம்படுத்தப்பட வேண்டும். இத்தகைய நிலைகளில் மக்கள் நலனுக்கான பணியில் திருச்சபை தன்னை முற்றிலுமாக ஈடுபடுத்தி வருகின்ற போதிலும் அநீதியான முறைகளை அகற்ற வேண்டிய சட்டங்களை இயற்றி செயல்படுத்த வேண்டியது அரசின் கடமையாகிறது.

ஐரோப்பிய ஐக்கிய அவையின் தற்போதைய தலைவராகச் செயல்படும் பிரான்ஸ் நாடு மனித உரிமைகளை பாதுகாப்பதிலும், மக்கள் நலனை மேம்படுத்துவதிலும் சாட்சிய வாழ்வு வாழ வேண்டிய தேவை உள்ளது. கருவில் உருவானது முதல் இயற்கையான மரணம் அடையும் வரை வாழ்வு மதிக்கப்படுதல், இலவச கல்விக்கான உரிமைகள், குடும்பத்திற்கான, வேலை செய்வதற்கான மற்றும் சமய நடவடிக்கைகளுக்கான உரிமைகள் மதிக்கப்படுவதை நேரடியாகக் காணும் ஐரோப்பியர்கள் தாங்களும் அதில் உயிரோட்டமான பங்களிப்பை வழங்குவர். நாடுகளுக்கிடையே மோதல்களைத் தடுக்கவும், தேசிய வேறுபாடுகளையும் வித்தியாசமான கலாச்சார பாரம்பரியங்களையும்

மதிக்கவுமான பணியில் சிறப்பு பங்காற்ற வேண்டும். ஏனையவர்களுக்குத் தன்னைத் திறந்தவர்களாய், அவர்களுடனான ஒருமைப்பாட்டிலேயே தேசியம் வளர முடியும் என்பதையும் எடுத்துரைத்து, பிரான்ஸ் நாட்டின் அமைதி, வளம், சுதந்திரம், ஐக்கியம், சரிநிகர்தன்மை மற்றும் சகோதரத்துவத்திற்கான செபத்திற்கும் உறுதி ௬றி அன்னைமரியின் கரங்களில் அனைவரையும் ஒப்படைத்து தனது இவ்வுரையை நிறைவு செய்தார் திருத்தந்தை.

RealAudioMP3







All the contents on this site are copyrighted ©.